திருச்சி, பிக் பஜார் தெரு, மேற்கு பவுல்வர்டு சாலை அருகே வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதேபோல், சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காளியம்மன்கோயில் தெருவில் கடைகளாலும், அதிக வாகன நிறுத்ததாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தீர்க்கும் விதமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், திருச்சி மேற்கு பவுல்வர்டு சாலையில், காளியம்மன்கோயில் தெருவில் மல்டி-லெவல் கார் பார்க்கிங், மினி மார்க்கெட், தெப்பக்குளத்தில் லேசர் லைட் மற்றும் சவுண்ட் ஷோ என மொத்தம் 61.9 கோடி ரூபாய் செலவில் ஆறு திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்தத் திட்டங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி அன்று திருச்சி மாநகராட்சி சார்பில் திறந்து வைக்கப்பட்டது. இப்போது இரண்டு மாதங்கள் நெருங்கி விட்டன, ஆனால் இவற்றில் பல திட்டங்கள் இன்னும் பொதுமக்களுக்குக் கிடைக்கப் பெறவில்லை. இதனால், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு என தெரிவிக்கின்றனர் திருச்சி வாசிகள்.
மல்டி-லெவல் பார்க்கிங்கில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கான சந்தாவையும் கவுன்சில் நிர்ணயித்துள்ளது. இது தொடர்பாக பேசிய சத்தா பஞ்சாயத்து இயக்கத்தின் இணைச் செயலாளர் கே.பி. ரங்கபிரசாத், "கார் பார்க்கிங் இடம் இல்லாத மக்கள் மல்டி-லெவல் பார்க்கிங்கை கோருகிறார்கள். ஆனால் மாநகராட்சி அதன் வருவாய் திறனை உணரவில்லை" என்று கூறினார்.
கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி திறக்கப்பட்ட மல்டி-லெவல் பார்க்கிங் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குவர வேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.