Skip to main content

நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி விவசாயிகள் கருப்புக்கொடி போராட்டம்! 

Published on 12/08/2020 | Edited on 12/08/2020

 

 

கடலூர் மாவட்டத்தில் 56 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி தெரிவித்துள்ளார்.

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கொடுமனூர் கிராமத்தில் கடந்த 12 வருடமாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வந்தது. இக்கொள்முதல் நிலையத்தில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த காவனூர், தொழூர், தேவங்குடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் தங்களின்  விவசாய விளை பொருளான நெல்லை விற்பனை செய்து வந்தனர். 

 

அதனடிப்படையில் நடப்பாண்டில் நேரடி நெல் கொள்முதல் மையம் திறக்கப்படும் என்று சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடந்த ஒரு மாத காலமாக திறந்தவெளியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை  குவியல் குவியலாக குவித்து வைத்துள்ளனர். ஆனால் தற்போது வரை நேரடி நெல் கொள்முதல் மையம் அப்பகுதியில் அமைக்கப்படாததால், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தங்களின் நெல் மூட்டைகள் வீணாகி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.  

 

இதனை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் கையில் கருப்புக்கொடி ஏந்தி நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்றும்,  விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்திட வழிவகுக்க வேண்டுமென்றும் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்