தமிழக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் நேற்று பதவியேற்றுக் கொண்ட நிலையில், நாளை மேயர் மற்றும் துணை மேயர்களுக்கான மறைமுக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர்களின் பட்டியலை திமுக தலைமை அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சியில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக 30 வார்டுகளை கைப்பற்றியது. அதோடு கூட்டணி கட்சிகள் 7 வார்டுகளை கைப்பற்றின. அதேபோல், சுயேட்சையாக தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற 5 பேர் திமுகவுக்கு ஆதரவு கொடுத்ததின் மூலம் ஆளும் கட்சியான திமுக 42 கவுன்சிலர்களுடன் பெரும்பான்மை பலத்துடன் இருக்கிறது. எதிர்க்கட்சியான அதிமுக 5 கவுன்சிலர்களையும், பா.ஜ.க. ஒரு கவுன்சிலரையும் வென்றுள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சி பெண் மேயருக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், திமுக சார்பில் வெற்றி பெற்றிருக்கும் 18 பெண் கவுன்சிலர்களிடையே போட்டி நிலவியது. இதில் கட்சிக்காக உழைத்தவர்களுக்குத்தான் மேயரையும், துணை மேயரையும் கொடுக்க வேண்டும். அதிலும் அனைத்து தரப்பினர் பாராட்டுக்கும் உரியவராகவும் இருக்க வேண்டும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி மேயர் வேட்பாளர் தேர்வின் போது தெரிவித்திருந்தார். இந்நிலையில், திண்டுக்கல் மாநகராட்சி, 23வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இளமதியை மேயர் வேட்பாளராக திமுக தலைமை அறிவித்துள்ளது.
வெற்றி பெற்றவர்கள் பதவியேற்ற நிலையில், திண்டுக்கல் மேயர் வேட்பாளர் இளமதி தான் என நமது நக்கீரன் இணையத்தில் முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.