
திண்டுக்கல் அருகே சிறுமலை பகுதியில் 28 கள்ளத் துப்பாக்கிகளை வீசிவிட்டு சென்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான சிறுமலையில் கள்ளத் துப்பாக்கிகள் புழக்கம் அதிகமாக இருப்பதாக திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. முத்துசாமிக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கடந்த ஒரு மாதமாக போலீசார் அப்பகுதியில் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து கள்ளத் துப்பாக்கி தயாரிப்பவர்கள் சிறுமலை பகுதிகளில் துப்பாக்கிகளை வீசிவிட்டு சென்றனர்.
இதுவரை 25க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை சாணார்பட்டி போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் திண்டுக்கல்லில் எஸ்.பி ரவளி பிரியா உத்தரவின்பேரில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர ரோந்து போலீசார் மற்றும் திண்டுக்கல் தாலுகா போலீசார் ஐந்து குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு குழுவும் 50க்கும் மேற்பட்ட போலீஸார் வீதம் சிறுமலை கிராமத்தில் வீடு வீடாக அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. துப்பாக்கி வைத்திருந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கள்ளத் துப்பாக்கி தயாரிப்பவர்கள் அவர்களிடம் இருந்து வாங்கி விற்பவர்கள் என 12க்கும் மேற்பட்டோரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். போலீசார் சோதனை எதிரொலியாக அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருப்பவர்கள் பொது இடத்தில் போட்டு விடுலாம் என கிராம நிர்வாகம் நேற்று முன்தினம் தண்டோரா மூலம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து வீடுகள் காட்டுப்பகுதிகளில் கள்ளத் துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தவர்கள். நேற்று முன்தினம் இரவு சிறுமலை அருகே கடம்பன்குளம் கிராமத்தில் உள்ள ஒரு பொது இடத்தில் துப்பாக்கிகளை வீசிவிட்டு சென்றனர். தகவலறிந்து வந்த திண்டுக்கல் தாலுகா இன்ஸ்பெக்டர் தெய்வம் தலைமையிலான போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று அங்கிருந்த 28 கள்ளத் துப்பாக்கிகள் மற்றும் நான்கு பேரல்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இப்படி ஒரே இடத்தில் 28 கள்ளத் துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.