கடந்த 15ம் தேதி நாடு முழுவதும் 73 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அதுபோல் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மாவட்ட விளையாட்டு திடலில் 73வது சுதந்திரதின தின கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
இந்த சுதந்திர தின விழாவில் திண்டுக்கல் மாவட்டத்தில் சுதந்திரத்துக்காகப் போராடிய 20க்கும் மேற்பட்ட தியாகிகள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு சுதந்திர தினம் கொண்டாடினார்கள்.
அந்த தியாகிகளுக்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி பொன்னாடை போத்தி கௌரவத்தது மட்டுமல்லாமல் நினைவு பரிசுகளும் வழங்கினார். அப்பொழுது தியாகிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியுடன் குரூப் போட்டாவும், செல்பியும் எடுத்துக் கொண்டனர். மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியும் தியாகிகள் குடும்பம் என்பதால் ஆர்வத்துடன் குடும்பத்தாருடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டார்.
ஆனால் இதுவரை பத்துக்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக இருந்து இருக்கிறார்கள். அந்த கலெக்டர்கள் எல்லாம் சுதந்திர தினம் மற்றும் குடியரசு நாளில் தியாகிகளை கூப்பிட்டு பெயரளவில் சால்வைகளைப் போட்டு அனுப்பி விடுவார்கள்.
ஆனால் இந்த கலெக்டர் விஜயலட்சுமி நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய தியாகிகள் குடும்பத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு அந்த தியாகிகளுக்கு மாலை , சால்வை அணிவித்து நினைவுப் பரிசுகளையும் வழங்கியதை கண்டு தியாகிகளும் அவர்களுடைய குடும்பத்தாரும் பூரித்துப் போய் விட்டனர்.