நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி திண்டுக்கல் மாநகராட்சி தேர்தலில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையேதான் கடும் போட்டியும் நிலவி வருகிறது. கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு திண்டுக்கல் நகராட்சியை மாநகராட்சியாக முன்னாள் முதல்வர் ஜெ. அறிவித்தார் அப்படி இருந்தும் கூட மாநகராட்சிக்கான வரைமுறையை விரிவுபடுத்த ஜெ. அரசு ஆர்வம் காட்டவில்லை. அதனாலேயே 60 வார்டுகளில் செயல்படக்கூடிய மாநகராட்சி 48 வார்டுகளில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. அதில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த மாநகராட்சியைப் பெண் மேயருக்கு ஒதுக்கி இருப்பதால் அதனடிப்படையில்தான் திண்டுக்கல் மாநகராட்சியில் கவுன்சிலர்கள் மூலம் மேயர் தேர்வு நடைபெற இருக்கிறது.
இதில் எதிர்க்கட்சியான அதிமுகவை பொறுத்தவரை சிட்டிங் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான சீனிவாசன் தலைமையில் ஒரு அணியும், முன்னாள் மேயர் மருதராஜ் தலைமையில் மற்றொரு அணியும் என இப்படி ஒரே கட்சியில் இரண்டு அணிகள் செயல்பட்டு வருகிறது. இதில் முன்னாள் மேயர் மருதராஜ் தனது மகள் பொன்முத்துவை மேயராக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 11வது வார்டிலும், தனது மகன் வீரமார்பன்(எ) பிரேமை துணை மேயராக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 8வது வார்டிலும் களமிறக்கி இருக்கிறார். அதோடு தனது ஆதரவாளர்களையும் சில வார்டுகளில் இறக்கி இருக்கிறார்.
அதேபோல் முன்னாள் அமைச்சர் சீனிவாசனும் தனது ஆதரவாளரான அபிராமி கூட்டுறவு சங்கத் தலைவர் பாரதி முருகனின் மனைவி உமாதேவியை மேயராக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 31வது வார்டில் களமிறக்கி இருக்கிறார். அதுபோல் தனது மகன் ராஜ்மோகனை துணை மேயராக கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் 4வது வார்டில் களமிறக்கியிருக்கிறார். அதேபோல் அவரது ஆதரவாளர்கள் பல வார்டுகளில் களமிறங்கி இருக்கிறார்கள். இப்படி அதிமுகவிலேயே இரண்டு அணிகள் மூலம் 48 வார்டுகளிலும் அதிமுக களமிறங்கியிருக்கிறது.
இதில் மேயராக களமிறங்கியுள்ள மருதராஜ் மகள் பொன்முத்து வாக்காளர்களை கவரும் வகையில் காய்கறிகள் விற்பது போலவும், பலகாரங்கள் போடுவது போலவும் வேலைகளை செய்து வாக்காள மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். அதேபோல் சீனிவாசனின் மகனான ராஜ்மோகனும் வாக்காள மக்களை வீடுகளிலும், கடைகளிலும் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். இப்படி இரு அணிகளில் உள்ள ஆதரவு அதிமுக வேட்பாளர்களும், வாக்காள மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்கள். அதோடு கூடிய விரைவில் சீனியும் தேர்தல் களத்தில் குதிக்க இருக்கிறார். இப்படி ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சியும் போட்டி போட்டுக்கொண்டு வருவதின் மூலம் தற்போது நிலவரப்படி 14 வார்டுகளை கைப்பற்றும் அளவுக்கு தேர்தல் களத்தில் ர.ர.க்கள் முன்னிலையிலிருந்து வருகிறார்கள்.
ஆளுங்கட்சியான தி.மு.க.வை பொறுத்தவரை 48 வார்டுகளில் 11 வார்டுகளை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கியது போக 37 வார்டுகளில் நேரடியாக அதிமுகவை எதிர்த்து களம் இறங்கி இருக்கிறார்கள். இதில் மேயரும், துணை மேயரும் தேர்தல் வெற்றிக்குப் பின் முடிவு செய்து கொள்ளலாம் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும், மாவட்டக் கழகச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமாரும் கூறியதின் பேரில் ஆளுங்கட்சியைப் பொறுத்தவரை மேயர், துணை மேயர் வேட்பாளர் யாரென உறுதிசெய்யப்படவில்லை. அதனால் தேர்தல் களத்தில் குதித்துள்ள ஆளுங்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களும் முதல்வர் ஸ்டாலின் செய்த சாதனைகளையும், சலுகைகளையும், திட்டங்களையும் பிட் நோட்டீஸ் அடித்து வாக்காள மக்களை வீடு வீடாக சந்தித்து சால்வை அணிவித்து காலில் விழுந்து நோட்டீஸ்களை கொடுத்து வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
இதில் இந்திராணி உட்பட சில வேட்பாளர்கள் ஓட்டல்களில் தோசை சுடுவது போலவும், டீ போடுவது போலவும் பணிகளைச் செய்து வாக்காள மக்களிடம் வாக்கு சேகரித்து வருவதுடன் மட்டுமல்லாமல் கடந்த காலங்களில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அமைச்சராக இருந்தபோது நகர மக்களுக்கு குடிநீர், இலவச வீட்டுமனைப் பட்டா, மாநகரம் முழுவதும் சாலை விதிகள் இப்படி கடந்த காலங்களில் அமைச்சர் ஐ.பி. செய்த திட்டங்களையும், சலுகைகளையும் வாக்காளர்கள், மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
அதுபோல் ஆளுங்கட்சி மேல் எந்த ஒரு அதிருப்தியும் பார்க்க முடியவில்லை. அதேபோல் ஆளுங்கட்சி மேயராக வந்தால்தான் மாநகரம் வளர்ச்சியடையும் என்ற பேச்சும் வியாபாரிகள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த உ.பி.களும் பம்பரமாக தேர்தல் களத்தில் வலம் வந்து கொண்டு இருப்பது, என் பேரில் தற்போது நிலவரப்படி 26 வார்டுகளை கைப்பற்றும் அளவுக்கு முன்னிலையில் இருந்து வருகிறார்கள். இருந்தாலும் அமைச்சர் ஐ.பெரியசாமியின் 48 வார்டுகளிலும் தேர்தல் பிரச்சாரத்திலும் குதிக்க தயாராகி வருகிறார். ஆனால் ஆளுங்கட்சியில் களமிறங்கியுள்ள 20 பெண் வேட்பாளர்களில் இந்திராணி, சுவாதி, சரண்யா, சாந்தி, ஆரோக்கிய செல்வி, கயல்விழி ஆகியோர் மேயர் ரேஸ்சிலும், துணை மேயர் ரேஸ்சில் நகர செயலாளர் ராஜப்பா, சுபாஷ், பிலால் உசேன், நாகராஜன் ஆகியோரும் இருந்து வருவதாக இப்பவே உ.பி.கள் மத்தியில் பேசப்பட்டும் வருகிறது.
ஆனால் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தை, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு 11-வார்டுகளை ஒதுக்கி இருக்கிறார்கள். இந்த வார்டுகளில் அதிமுக உடன் நேரடியாக களமிறங்கி வருவதன் மூலம் போட்டியும் கடுமையாக இருந்து வருகிறது. அதேபோல் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் எதிர்த்து 17வது வார்டைச் சேர்ந்த இளம் வயதான வக்கீல் வெங்கடேஷ், 44 வது வார்டில் களமிறங்கியுள்ள மார்த்தாண்டம், இரண்டாவது வார்டில் களமிறங்கியுள்ள சந்தோஷ் உள்பட சில சுயேட்சைகளும் களமிறங்கி கலக்கி வருகிறார்கள்.
இதில் 17வது வார்டில் களமிறங்கியுள்ள சுயேட்சை வேட்பாளர் வக்கீல் வெங்கடேஷ் வெற்றி வாய்ப்பை தக்க வைக்கும் அளவுக்கு முன்னிலையிலிருந்து வருகிறார். மற்ற சுயேட்சை வேட்பாளர்களுக்கிடையே போட்டியும் இருந்து வருகிறது.
அதேபோல் அதிமுக கூட்டணியிலிருந்த பிஜேபி தனித்து சில வார்டுகளில் களமிறங்கி இருக்கிறது. இருந்தாலும் 14வது வார்டில் களமிறங்கியுள்ள தனபாலுக்கும் அதே வார்டில் திமுகவில் களமிறங்கியுள்ள சரவணனுக்குமிடையே கடும் போட்டியும் இருந்து வருகிறது. இப்படி மாநகராட்சியைத் தக்கவைப்பதில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி இடையே தான் கடும் போட்டி நிலவி வந்தாலும் கூட தற்போது நிலவரப்படி மாநகராட்சியை ஆளுங்கட்சி கைப்பற்றக் கூடிய நிலையில் தான் தேர்தல் களமும் இருந்து வருகிறது.