திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக காகங்களை கொன்று எடுத்து சென்ற இரண்டு பேரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் அருகே உள்ள குளத்தூர் பகுதியில் ஏராளமான காக்கைகள் இறந்து கிடந்தன. அவற்றை இரண்டு பேர் சாக்கு பையில் அள்ளிக் கொண்டு இருந்தனர். அந்த விஷயம் அப்பகுதி மக்களுக்கு தெரிந்ததின் பேரில் காக்கைகளை கொன்று சாக்கால் அள்ளிக் கொண்டு இருந்த வரதன் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரையும் மடக்கி பிடித்து போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் அடிப்படையில் சம்பவம் இடத்துக்கு வந்த போலீசார் காக்கைகளை கொன்ற இரண்டு பேரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்பொழுது தான் அவர்கள் காக்கைகளை விஷம் வைத்த தானியங்களை தூவி சாகடித்து வருவது தெரிய வந்தது அதோடு இப்படி சாகடிக்கப்படும் காக்கைகளை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்களுக்கு அனுப்பி வைப்பதின் மூலம் அதை சைடிஷ்சாக குடிமகன்களுக்கு விற்பனை செய்து வருவது தெரிய வந்துள்ளது.
இதனால் டென்ஷன் அடைந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், இது போல் மாவட்டத்தில் பல இடங்களில் காக்கைகளை விஷம் வைத்து சாகடித்து அள்ளி செல்வது வழக்கமாக இருப்பது தெரிய வந்தது இப்படி தானியங்களில் விஷம் வைத்து சாகடிக்கப்படும் காக்கைகளை டாஸ்மாக் பார்களில் விற்பனை செய்கிறார்கள். அதை டாஸ்மாக் பார் கடைகாரர்கள் இந்த காக்காகறியை காடை கறி என குடிமகன்களுக்கு விற்பனை செய்து வருவது போலீசாருக்கு தெரிய வந்தது.
இதற்கிடையில் காகங்கள் கொல்லப்பட்ட தகவல் அறிந்த பறவைகள் நல அலுவலர் பாரதிதாசன் சம்பவம் இடத்துக்கு வந்து பார்வையிட்டு வனத்துறை அதிகாரிகளுக்கும் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் சம்பவம் இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகளும் வந்து தானியங்களில் விஷம் வைத்து சாகடிக்கப்பட காக்கைகளை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். இப்படி குடிமகன்களுக்கு காக்கைகளை கொன்று அதை காடைகறியாக டாஸ்மாக் பார் கடைகளில் விற்பனை செய்து வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.