ஜெயலலிதா, சசிகலா, பழனிசாமி, பன்னீர்செல்வம் என எல்லோரையும் ஏமாற்றியவந்த தினகரன் தற்போது தொண்டர்களையும் ஏமாற்றிவருகிறார் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியர்களிடம் திவாகரன் பேசுகையில்
அண்ணா, எம்ஜிஆர், திராவிடம் இல்லாத அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் சசிகலா உட்பட தொண்டர்கள் யாருக்கும் உடன்பாடு இல்லை. எல்லாம் திணிக்கப்பட்ட முடிவுகள். எடுக்கப்படும் முடிவுகள் எல்லாம் தனிப்பட்ட குடும்ப முடிவுகளாக இருக்கிறது. அவர்களின் செயல்பாடுகள் எல்லாம் ரகசியமாக இருக்கிறது எல்லாமே பேரத்தில் முடிகிறது. சசிகலா சொன்னாலும் நாங்கள் ஏற்றுகொள்ள தயாராக இல்லை, சசிகலாவிற்கே தினகரனின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை.
அண்ணா, திராவிடம் இல்லாத அதிமுகவின் அடிச்சுவடு இல்லாத ஒரு இயக்கத்தை நிர்மானிக்க தினகரன் திணித்திருக்கிறார் அதற்கு சில கைத்தடிகள் அவருக்கு உதவுகிறது. காலத்தின் கட்டாயம் சில தொண்டர்கள் அங்கே குவிந்திருக்கிறார்கள் விரைவில் என்னைப்போல் வெளியேறுவார்கள். அதிமுக சுவடு இல்லாமல் கட்சியை தொடங்க காரணமே நாளை அதிமுக உடமை உடையவர்கள் எந்த கேள்வியும் கேட்கக்கூடாது ''நானே ராஜா நானே மந்திரி'' என காட்டிக்கொள்ளவே தினகரன் இப்படி ஒன்றை தொடங்கியுள்ளார். கட்சி பெயரில் அதிருப்தி, செயலில் அதிருப்தி, நடைமுறையில் அதிருப்தி என தொடர்ந்து அதிருப்தி மட்டுமே நிலவுகிறது.
வெற்றிவேல் காங்கிரஸில் இருந்து வந்தவர் அவருக்கும் அதிமுகவிற்கும் தொடர்பே இல்லை ''ஊரு ரெண்டுபட்டால் கூத்தடிக்கு கொண்டாட்டமாம் '' என்பதை போலதான் அவர் இருக்கிறார். இன்று நிலைமையையே கெடுத்து அதிமுக தொண்டர்கள் அல்லோலப்பட காரணமானவர்களில் சிலர் உள்ளனர் அதில் வெற்றிவேலும் ஒருவர் எனக்கூறியுள்ளார்.