சாத்தூர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ராஜவர்மன். தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளிலும் நடக்கின்ற இடைத்தேர்தலில், ராஜவர்மன் போன்ற அதிமுக வேட்பாளர்கள் பெறும் வெற்றியே, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக நீடிப்பதைத் தீர்மானிக்கக்கூடியதாக உள்ளது.
பிரச்சாரத்தைத் துவக்கிய நாளிலேயே, சாத்தூர் அமமுக வேட்பாளர் எஸ்.ஜி.சுப்பிரமணியன் “தமிழகத்திலே முதலமைச்சராக இருக்கக்கூடிய அண்ணன் எடப்பாடியை முதலமைச்சராக ஆக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த இடைத்தேர்தலே நடக்கிறது என்பதை உங்களிடத்திலே தெளிவாகச் சொல்லிகொள்கிறேன். கண்டிப்பாக நான் வெற்றிபெறுவேன். இந்த இடைத்தேர்தலில் மும்முனைப் போட்டியா? இருமுனைப் போட்டியா? ஒருமுனைப் போட்டியா என்பது மே 23-ஆம் தேதி தெரிந்துவிடும்.” என்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்திருக்கிறார்.
‘டிடிவி தினகரனின் கட்சியான அமமுக, எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க வேண்டும் என்பதற்காகவா இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது? எடப்பாடி பழனிசாமி ஆதரவுநிலை எடுத்து, ஒரே தொகுதியில் இரண்டு கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுவது குழப்பமாக அல்லவா இருக்கிறது?’
-அமமுக மாசெவும் சாத்தூர் வேட்பாளருமான எஸ்.ஜி.சுப்பிரமணியனிடமே கேட்டோம்.
“நான் ஏதோ தப்பா சொல்லிருப்பேன். அது உங்க காதுவரைக்கும் வந்திருச்சா. எடப்பாடி மேல நான் எதுக்கு பாசமா இருக்கப்போறேன்? மொதல்ல இருந்தே எதிர்த்துக்கிட்டுத்தானே இருக்கோம். எங்களுக்கு வந்து அண்ணன் டிடிவியை முதலமைச்சரா ஆக்கணும். உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? அதிமுகவுல 90 சதவீதம் பேர் எங்க கட்சிக்குத்தான் ஓட்டு போடுவாங்க. இங்கே அதிமுக வேட்பாளரா நிக்கிற ராஜவர்மன் கட்சிக்காக என்ன பண்ணுனாரு? கட்சிக்காக என்ன தியாகம் பண்ணிட்டாரு? அதிமுக கட்சிக்காரங்களுக்குத் தெரியும்ல. அதான்.. அதிமுக கிளைச் செயலாளர்கள்கூட ‘அண்ணே.. ஓட்டு உங்களுக்குத்தான்’னு என் கையைப்பிடிச்சு சொல்லுறாங்க.” என்று சிரித்தார்.
அட, விடுங்கப்பா! ‘டங் ஸ்லிப்’ ஆவதெல்லாம் அரசியலில் சகஜமப்பா!