சசிகலாவை ஒரு காலத்தில் கடுமையாக விமர்சித்துத் தள்ளிய ஆடிட்டர் குருமூர்த்தி, சசிகலா இல்லாமல் திமுகவை வீழ்த்த முடியாது என்று சமீபத்தில் பேசினார். அதற்காக, கங்கை-சாக்கடை என்கிற உருவகங்களை அவர் பயன்படுத்தியது அநாகரீகத்தின் உச்சம்! இதனால் குருமூர்த்திக்கு எதிரான கண்டனங்கள் அதிகரிக்கச் செய்தன. சசிகலாவை சாக்கடை என்கிற பொருள் கொள்ளத்தக்க வகையில் அவர் பேசியதை அறிந்து, அ.ம.மு.க. கட்சி நிர்வாகிகள் ஏகத்துக்கும் கோபமடைந்தனர். இந்த நிலையில், அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், குருமூர்த்தியின் பேச்சை கண்டிக்காமல் மௌனம் சாதித்தார். இது, கட்சி நிர்வாகிகளை அதிர்ப்தியடைய வைத்தது.
உடனே மாநில நிர்வாகிகள் பலரும், ’’ஆடிட்டரை கண்டிக்காமல் மௌனமாக இருப்பது தவறு ; இப்படி கண்டிக்காமல் இருந்தால் நாளைக்கு இன்னமும் மோசமாக சின்னம்மாவை விமர்சிப்பார்கள். இதனை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. குருமூர்த்தியின் கொடும்பாவியை எரிக்கப் போகிறோம்’’ என்று தினகரனிடம் கொந்தளித்தனர். கொடும்பாவி எரிக்கப் போவதாகச் சொன்னதை தடுத்த தினகரன், ’’அந்த ஆள்தான் சாக்கடை! அந்த ஆள் பேச்சுக்கு நம்மை விட ஜனநாயக சக்திகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதே நமக்கான பலம்தான். அதனால் அந்த நபரை விமரிசித்து நாமும் சாக்கடையாகணுமா? ‘’ என்று சொல்லியிருக்கிறார் தினகரன். இதனை நிர்வாகிகள் ஏற்க மறுத்ததையடுத்தே, தனது ட்விட்டர் பக்கத்தில் ஆடிட்டர் குருமூர்த்தியை கண்டித்து பதிவு செய்தார் தினகரன் என்கின்றனர் அ.ம.மு.க.நிர்வாகிகள்.