சிதம்பரம் நடராஜர் கோவிலில் 27-ந் தேதியான இன்று தேர்த்திருவிழாவும், 28-ந் தேதி ஆனி திருமஞ்சன தரிசன விழாவும் நடைபெற இருந்தது.
இந்த நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால், மிகவும் எளிய முறையில் ஆனி திருமஞ்சன திருவிழாவை கோவிலுக்கு உள்ளே நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து 150 தீட்சிதர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. திருவிழாவில் கலந்து கொள்ளும் அனைத்து தீட்சிதர்களுக்கும் கரோனா பரிசோதனை முடிவின்படி அனுமதிக்கப்படுவர் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து மருத்துவர்கள் குழுவினர் டெஸ்ட் எடுத்தனர்.. இந்த நிலையில் 150 பேரில் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனைத்தொடர்ந்து கோவிலுக்குள் சிதம்பரம் நகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து அனைத்து இடங்களையும் சுத்தம் செய்தனர். திருவிழாவுக்கு 5 தீட்சிதர்களுக்கு மட்டும் அனுமதி அளித்து திருவிழாவிற்கான பூஜைகள் நடத்த வேண்டும் என வருவாய்துறை அதிகாரிகள் கூறினார்கள்.
இந்தநிலையில் இரவு பூஜை முடிந்து தீட்சிதர்கள் கோவிலை விட்டு வெளியே வரவில்லை. இதனைத் தொடர்ந்து சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் மற்றும் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் போலீஸ் படையினர் கோவிலுக்கு உள்ளே சென்று தீட்சிதர்களை வெளியே அனுப்ப முயற்சி செய்தனர். அப்போது தீட்சிதர்கள் நாங்க முடிவு செய்துவிட்டு வெளியே வந்து விடுகிறோம் என்று கூறியதின் பேரில் போலீசார் அனைவரும் வெளியே வந்தனர். பேச்சுவார்த்தை நள்ளிரவு 12 மணிக்கு மேல் சென்றது. முடிவு எட்டவில்லை.
இந்த நிலையில் இரவு 1 மணிக்கு மேல் தீட்சிதர்கள், 150 பேரில் கரோனா டெஸ்டில் நெகடிவ் என வந்த 148 பேரையும் அனுமதிக்க வேண்டும் இல்லை என்றால் அனைவரும் சாலையில் உட்கார்ந்து ஒப்பாரிவைப்போம் என்று கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜன், டிஎஸ்பி கார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் தீட்சிதர்களிடம் தற்போது நிலவும் பிரச்சனையை எடுத்து கூறினார்கள். அப்போதும் சமாதானம் ஆகாத நிலையில், இந்தநிலை நீடித்தால் கோவிலுக்கு சீல் வைக்கும் நிலைமையும் ஏற்படும் என்று அதிகாரிகள் மட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இதனைகேட்டு அதிர்ச்சி அடைந்த தீட்சிதர்கள் 25 பேரை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டனர். இதனை ஏற்ற அதிகாரிகள் அவர்களை கோவிலின் உள்ளே சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகயில் கிருமி நாசினியை கொண்டு கைகளை கழுவிகொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தி அனுப்பபட்டனர். இன்று காலை தேர் திருவிழாவுக்கான அனைத்து பூஜைகளும் எளிய முறையில் நடைபெற்றது.