கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு ரேசன் அட்டை தாரர்களுக்கு ரூபாய் 1000 ரொக்கமும், அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. இதற்கான டோக்கன் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று திருச்சியில் டோக்கன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ரேசன் கடைக்கு வந்து வாங்கிக்கொள்வதா, அங்கு கூடினால் சமூகத் தொற்று ஏற்படும் என குழப்பத்தில் இருந்தனர்.
புதன்கிழமை காலையில் ரேசன் அட்டைதாரர்களுக்கு வீட்டுக்கே வந்து டோக்கன் தரப்படும் என்று ரேசன் கடை அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி திருச்சி வெல்லமண்டி பகுதியில் வீட்டிற்கே வந்து டோக்கன் கொடுத்துவிட்டுச் சென்றனர். அவர்களிடம் ஆயிரம் ரூபாய் தொகை எப்போது வரும் என்று கேட்டதற்கு, முதல்ல டோக்கன வாங்கிக்கொள்ளுங்கள், அதெல்லாம் எங்களுக்கு தெரியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் எப்போது கிடைக்கும்? அதனை வாங்குவதற்கு கடைக்கு வர வேண்டுமா? வீட்டிற்கே பொருள்கள் வருமா? என்று கேட்டதற்கும் அதெல்லாம் எங்களுக்கு தெரியாது என்று கூறிவிட்டு சென்றனர் அதிகாரிகள்.
-மகேஷ்