கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியில் இருந்தபோது அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனளிக்காத காரணத்தால் அவர் மறைந்துவிட்டதாக சொல்லப்பட்டது. இருப்பினும், அவரது மரணம் தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆணையம் அமைக்கப்பட்டது. இதையடுத்து, ஆணையம் தீவிர விசாரணையில் இறங்கினாலும், ஜவ்வாக இழுத்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், அதிமுக ஆட்சி நிறைவடைந்து திமுக ஆட்சிக்கு வந்தது. இதையடுத்து, சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி அளித்தார்.
இதையடுத்து, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, சசிகலாவின் உறவினரான டாக்டர் கே.எஸ். சிவகுமார், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய மருத்துவத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில், இந்த பரபரப்பான சூழ்நிலையில் சசிகலாவுடன் அமமுக தலைவர் டிடிவி தினகரன் தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசி வருகிறார்.