தர்மபுரி அருகே, பத்தாம் வகுப்பு மாணவியிடம் குடிபோதையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே, ஜக்கமசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், அரூரைச் சேர்ந்த சின்னமுத்து, லட்சுமணன் ஆகிய இருவரும் வரலாறு பாட ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் இருவரும் அடிக்கடி மது அருந்திவிட்டு குடிபோதையில் பள்ளிக்கு வந்துள்ளனர். மேலும், அதே பள்ளியில் எஸ்எஸ்எல்சி படித்து வரும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தும் வந்துள்ளனர். மாணவியின் செல்போனுக்கு காதல் கவிதைகள், ஆபாசமான குறுந்தகவல்களையும் அனுப்பி உள்ளனர்.
மேலும், தங்களின் காதல் லீலைகளைப் பற்றி வெளியே யாரிடமாவது சொன்னால் தேர்வில் தோல்வி அடையச் செய்து விடுவோம் என்றும் அந்த மாணவியை பலமுறை மிரட்டியுள்ளனர். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை (ஜன. 8, 2020) அவர்கள் இருவரும் குடிபோதையில் பள்ளிக்கு வந்ததுடன் மீண்டும் அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.
குடிபோதை ஆசிரியர்களின் எல்லை மீறி நடந்து கொள்வது பொறுக்க முடியாத அந்த மாணவி, இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் முருகேசன் மற்றும் பெற்றோரிடமும் நடந்த விவரங்களைச் சொல்லி அழுதார். மாணவியின் பெற்றோர், ஊர் பொதுமக்கள் ஆகியோர் பள்ளி முன்பு திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து மகேந்திரமங்கலம் காவல்துறையினர் ஆசிரியர்கள் இருவரையும் கைது செய்தனர்.
இதற்கிடையே, இந்த வழக்கு பென்னாகரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர்கள் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், ஆசிரியர்கள் சின்னமுத்து, லட்சுமணன் ஆகிய இருவரையும் பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்களிடம் துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தர்மபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முத்துக்குமரன் கூறினார்.