தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கடந்த 6 ஆம் தேதி கிருஷ்ணகிரி நகருக்குள் நுழைந்த இரண்டு ஆண் யானைகள் அங்கு தேவசமுத்திரம் ஏரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 நாட்களாக முகாமிட்டிருந்தன. அப்போது கிருஷ்ணகிரி சம்பந்த மலைக்கு சென்று அங்கு ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற மீன் குத்தகைக்காரரான பெருமாள் என்பவரை மிதித்துக் கொன்றன.
அதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் தீவிரமாக இறங்கினர். அதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மகாராஜா கடை அருகே உள்ள மூளைக்காடு பகுதிக்கு இடம் பெயர்ந்த யானைகளை அங்கிருந்து நரக பகுதி காப்புக்காடு வழிய பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ்புங்குருத்தி வனப்பகுதிக்கு விரட்டினர். பின்னர் ஆந்திராவுக்கு சென்ற இரண்டு ஆண் யானைகளும் அங்கு மல்லனூர் பகுதியில் இருந்து பெங்களூருவுக்கு பணிக்காக சென்ற 3 பெண்களை தாக்கியது. இதில் உஷா என்ற பெண் உயிரிழந்தார். மேலும் 2 பெண்கள் படுகாயம் அடைந்து குப்பம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் வனத்துறையினருடன் இணைந்து கிராம மக்கள் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டபோது சிவலிங்கம் என்பவர் உயிரிழந்தார்.
அதைத் தொடர்ந்து ஆந்திர வனத்துறையால் வளர்க்கப்படும் கணேஷ் மற்றும் ஜெயித்து ஆகிய இரண்டு கும்கி யானைகளை வரவழைத்து ஆந்திர வனப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதிக்கு நேற்று மாலை விரட்டினர். அதைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தகரகுப்பம், கரடி குட்டை வழியாக யானைகள் ஆத்தூர் குப்பம், தண்ணீர் பந்தல் பகுதியில் தற்போது தேசிய நெடுஞ்சாலை கடந்து முகாமிட்டுள்ளன. இதை வனத்துறையினர் விரட்டுவதற்கு போராடி வருகின்றனர்.
மேலும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் யானைகளை விரட்டும் பணியை ஆய்வு செய்து பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதில் யானைகளை விரட்ட தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மண்டலத்தில் உள்ள வேட்டை தடுப்பு பிரிவு காவலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் யானைகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் வனத்துறையினர் இணைந்து மாலைக்குள் வனப்பகுதிக்குள் யானைகள் விரட்டப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் தெரிவித்தார்.