தர்மபுரி மாவட்டத்தில் கனிம வளங்களை எடுப்பதற்கான டெண்டர் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி, தி.மு.க. முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பர்கூர், தேன்கனிக்கோட்டை, போச்சம்பள்ளி தாலுகாக்களில் 18 இடங்களில் கருப்பு, சிவப்பு, சாம்பல் நிற கிரானைட்டுகளை எடுப்பதற்கு டெண்டர் கோரி, அக்டோபர் 9- ஆம் தேதி, மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார்.
விதிகளுக்குப் புறம்பாக பிறப்பிக்கப்பட்ட இந்த டெண்டரை ரத்து செய்யக்கோரி, தர்மபுரி தொகுதி திமுக முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், கிரானைட் குவாரிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக,மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, சுற்றுச்சூழல் சான்றிதழ் பெறப்பட வேண்டுமென்றும், வழிகாட்டுதல்களுக்கு முரணாக வெளியிடப்பட்டுள்ள இந்த டெண்டர் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.