கடலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் போன்ற மாவட்டங்களில் பெண்களின் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து கூறும் சட்டவிரோத கும்பலின் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் ஆண், பெண் பாலின விகிதம் குறைவாக இருப்பதால் இதனை ஈடு செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியர் சாந்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதனையொட்டி இவரது அறிவுறுத்தலின்படி ஊரக நலப் பணிகள் இயக்குநர் சாந்தி தலைமையிலான குழுவினர் சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து கூறும் சட்டவிரோத கும்பல்கள் குறித்துத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை நான்கு சட்டவிரோதமாகப் பாலினத்தைக் கண்டறிந்து கருக்கலைப்பு செய்யும் சட்ட விரோத கும்பலைச் சேர்ந்தவர்கள் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாகக் கடந்த மூன்று மாதங்களில் (ஜூன் - ஆகஸ்ட்) மாதத்தில் தொடர்ந்து மூன்று சட்டவிரோத கருக்கலைப்பு கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்ணாகரத்தை அடுத்துள்ள நெற்குந்தி என்ற பகுதியில் கருவின் பாலினம் கண்டறியும் கும்பலைச் சார்ந்த முருகேசன் சின்ராஜ் மற்றும் பாலக்கோடு பகுதியில் கடந்த 13ஆம் தேதி இதே போன்ற செயல் ஈடுபட்ட கற்பகம் ஆகிய மூன்று பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இதுபோன்ற குழுவினர் கருக்கலைப்பு சம்பவத்தில் ஈடுபடுவது, இந்த சம்பவங்களில் ஈடுபடக்கூடிய இடைத் தரகர்களின் தொடர்பு எண் மூலம் சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி, “கருவின் பாலினம் கண்டறிந்து தெரிவிக்கும் கும்பல் கண்டுபிடிக்கப்பட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். கருவின் பாலினம் கண்டறிதல் தடைச் சட்டம் 1994ஆம் ஆண்டு சட்டத்தின்படி குண்டர் சட்டம் பாயும்” என எச்சரித்துள்ளார்.