கரூர் மாவட்டத்தில் குற்றங்களைத் தடுக்கவும், குற்ற வழக்குகளின் புலன் விசாரணைக்கு உதவிடும் வகையிலும் கரூர் மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் இயங்கி வரும் சோதனைச்சாவடிகள், முக்கிய ஊர்கள் மற்றும் முக்கிய சாலைகளின் சந்திப்புகள் ஆகிய இடங்களில் வாகனங்களின் பதிவு எண் மற்றும் விவரங்களைத் தெரிவிக்கக் கூடிய 34 அதிநவீன தானியங்கி கேமராக்கள், கரூர் நகரப் பகுதிகளில் 64 கேமராக்கள் மற்றும் சோதனைச்சாவடிகளில் 40 கேமராக்கள் பொருத்தப்பட்டு, மொத்தம் 138 கேமராக்கள் நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு திறந்து வைத்தார்.
காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு பேசுகையில், கரூர் மாவட்டத்தில் பொருத்தப்பட்டுள்ள இந்த அதிநவீன கேமராக்கள் மூலம் வாகனங்களை முழுமையாகக் கண்காணித்து விதிமீறல் வாகனங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், வாகன விபத்துக்கள் மற்றும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், துணைத் தலைவர் சரவண சுந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் ஆகியோர் கலந்து கொண்டனர்.