பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஆடி பெருக்கு தினத்தை முன்னிட்டு மழை பொழிய வேண்டி ஆண்டுதோறும் கரகம் தூக்கி சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கரகம் தூக்குதல் நிகழ்ச்சி நாட்டார்மங்கலம் பெருமாள் கோயிலில் இருந்து புறப்பட்டு, ஊர்வலமாக கரகத்தைத் தலையில் சுமந்தபடியே செட்டிகுளம் வடபழனி என்றழைக்கப்படும் தண்டாயுதபாணி கோயிலின் மலை அடிவாரத்தில் உள்ள பஞ்சநதி தெப்பக்குளத்திற்கு வந்தனர்.
பின்னர் பக்தர்கள் குளத்தில் புனித நீராடி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பக்தர்கள் கரகத்தைத் தலையில் சுமந்தவாறு நாட்டார்மங்கலம் கிராமத்தில் முக்கிய வீதி வழியாகச் சென்று செல்லியம்மன் கோவிலுக்கு வந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தினர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.