திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் இன்று மாலை 6 மணிக்கு 2660 அடி உயரம்முள்ள மலைஉச்சியில் ஏற்றப்படவுள்ளது. இந்த நாளில் கிரிவலம் வந்தால் உகந்தது என பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். பல நூற்றாண்டாக தீபத்தன்று பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.
இந்த ஆண்டும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் லட்ச கணக்கில் கிரிவலம் வந்துக்கொண்டு இருக்கின்றனர். தொடர்ச்சியாக மழை பெய்துக்கொண்டு இருந்தாலும் பக்தர்கள் வருகை என்பது நிகழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறது. கடந்த ஆண்டைவிட குறைவு என்றாலும் இரவுக்குள் தோராயமாக 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்கிறார்கள் காவல்துறை தரப்பில்.
2660 அடி உயரத்தில் உள்ள மலை உச்சியில் உள்ள சிவப்பாதம் பகுதியை பக்தர்கள் வணங்கிவிட்டு வருவது வழக்கம். அங்கு தான் தீபம் ஏற்றுவார்கள். இந்த தீபம் சுமார் 20 கி.மீ சுற்றளவுள்ள மக்களுக்கு பிரகாசமாக தெரியும். கடந்த ஆண்டு முதல் மலை ஏறுவது தடை செய்யப்பட்டுள்ளது. அது சர்ச்சையானதால் 2 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்கள் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் மலையேற அனுமதி அட்டை வழங்கினர். இந்த ஆண்டும் அப்படி அனுமதி அட்டை 2 ஆயிரம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மலைக்கு செல்பவர்களிடம் விதைப்பந்துக்கள் தரப்பட்டுள்ளன. அதன்படி 10 ஆயிரம் விதைப்பந்துக்கள் மலையில் வீச மாவட்ட ஆட்சியர் கந்தசாமியும், வனத்துறையும் நடவடிக்கை எடுத்துள்ளன என்பது குறிப்பிடதக்கது.
அதேப்போல் கடந்த ஆண்டுக்கு முன் ஆண்டுவரை மலை உச்சிக்கு செல்ல பல வழிகளை பக்தர்கள் பயன்படுத்திவந்தனர். இந்த ஆண்டு முதல் பேகோபுரம் எதிரேயுள்ள வழியில் மட்டும் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு மற்ற வழிகளில் ஏறாத வண்ணம் தடுக்கப்பட்டுள்ளது.