கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குறும்பர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பூர்வீக குலதெய்வமான வீரபத்திர சாமிக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை குலதெய்வ வழிபாடு செய்தல், நேர்த்திக்கடன் செய்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவது வழக்கம்.
இந்நிலையில் அதே பகுதியில் அருகிலுள்ள நீர்நிலைகளுக்கு வீரபத்திர சுவாமியை எடுத்துச் சென்று, சிறப்பு பூஜை செய்யப்பட்டு மேலும், கத்தி கழுவுதல் என்னும் நிகழ்ச்சி மற்றும் தங்களது முன்னோர்களை வணங்கி, வீரபத்திர சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், பக்தர்கள் தங்களது தலையில், தேங்காய் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து, வீரபத்திர சுவாமியை ஊர்வலமாகக் குறும்பர் இன மக்கள் எடுத்துச் சென்று அங்கு, சுவாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
இதையடுத்து, பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், பக்தர்களுக்கு சாட்டையடி கொடுத்தும் நேர்த்திக்கடனைச் செலுத்தி வழிபட்டனர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.