சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபைக்குள் சென்று வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனி திருமஞ்சன தரிசனமும் ஆகிய இரு திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. குறிப்பாக சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் உள்ள கனகசபை பகுதியில் தீட்சிதர்கள் மட்டுமே சென்று வந்த நிலையில், கனகசபையில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வந்தது.
இது தொடர்பாக நீதிமன்ற தீர்ப்புகளும், அரசின் உத்தரவுகள் இருந்தாலும் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை முதலே பக்தர்கள் அனைவரும் கனகசபைக்கு சென்று வழிபட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனி திருமஞ்சன திருவிழாவையொட்டி ஜூலை 11, 12, 13 ஆகிய நாட்களில் பூஜை நேரங்களை தவிர மற்ற நேரங்களில் பக்தர்களுக்கு கனகசபை மீது ஏறி வழிபாடு அனுமதி அளிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது