கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம், கீழ்குப்பம் ஆகிய நான்கு காவல் நிலையங்களில் கடந்த மூன்றுஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு மது கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருந்து வந்துள்ளன. இந்த மது கடத்தல் சம்பவங்களில் போலீஸாரால் கைப்பற்றப்பட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரி தலைமைலையில் மேற்படி மதுபாட்டில்கள் அழிக்கும் பணி நேற்று நடைபெற்றது. கள்ளக்குறிச்சி அருகில் உள்ள பெருவங்கூர்ஏரி பகுதியில் 180 மில்லி லிட்டர் அளவு கொண்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குவார்ட்டர் பாட்டில்களில் இருந்த மதுவை கீழே கொட்டி அழித்தனர். இந்த நிகழ்வின் போது கள்ளக்குறிச்சி மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ரேவதி, தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் குமார், சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ராஜா உட்பட சக போலீசாருடன் இணைந்து மேற்படி மதுபாட்டில்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஒரே நேரத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் அழிப்பு நடைபெற்றது கண்டு அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.