சென்னையில் புறநகர் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் வரை செல்லக்கூடிய மின்சார ரயிலானது 9.30 மணி அளவில் பேசின் பிரிட்ஜ் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தபோது திடீரென பயங்கர சத்தத்துடன் நிறுத்தப்பட்டது. இதனால் உள்ளே இருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு இறங்கினர். உடனடியாக ரயிலில் இருந்த அனைவரும் இறக்கப்பட்டனர். அப்பொழுது அதே டிராக்கில் மற்றொரு ரயில் வந்திருப்பது தெரியவந்தது. உடனடியாக சிவப்பு கொடி காட்டப்பட்டு எதிரே வந்த ரயில் நிறுத்தப்பட்டது.
இதில் திருவள்ளூர் சென்று கொண்டிருந்த புறநகர் ரயிலின் கடைசி பெட்டி தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டது. இதனால் பயங்கர சத்தம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டாலும் திடீரென ஏற்பட்ட இந்த நிகழ்வால் அங்கு சற்று பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து ரயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து ரயில்வே ஊழியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அண்மையில் இதேபோல் ஊட்டி மலை ரயிலில் ஒரு பெட்டி தடம் புரண்டது குறிப்பிடத்தக்கது.