தென்கிழக்கு வங்கக் கடலில் நேற்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. மேலும், இந்தக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக மாறலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இன்று முதல் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், 19 ஆம் தேதியும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று முதல் டிசம்பர் 17 ஆம் தேதி வரை அந்தமான் கடல், தென் கிழக்கு வங்கக்கடல் போன்ற பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.