தூர்தர்ஷன் சென்னை பிரிவின் உதவி இயக்குநர் (திட்டம்) ஆர்.வசுமதி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மத்திய சிவில் சேவைகள் (வகைப்பாடு, கட்டுப்பாடு மற்றும் மேல்முறையீடு) விதிகள் 10-இன் விதி 10 (1)-இல் வழங்கப்பட்ட அதிகாரத்தின் பிரகாரம், பணியிடை நீக்க உத்தரவில் கையெழுத்திட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார், டெல்லி பிரசார் பாரதி செயலகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சசி சேகர் வேம்பதி. முன் அனுமதி பெறாமல் வசுமதி தலைமையகத்தை விட்டு வெளியேறக்கூடாது என்றும் அந்த ரகசிய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏன் இந்த நடவடிக்கையாம்?
கடந்த 30-ஆம் தேதி சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அங்கு சிங்கப்பூர் – ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி உரை நிகழ்த்தினார். பிரதமர் மோடியின் பேச்சை நேரலை செய்ய சென்னை தூர்தர்ஷன் தவறிவிட்டது. அந்தக் காரணத்துக்காகவே, வசுமதி நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கிறார் என்று தூர்தர்ஷன் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ரகசிய உத்தரவெல்லாம் அம்பலமாவதுதானே டிரெண்ட்? விளம்பரம்.. ஸாரி.. பாரத பிரதமர் ஆற்றிய உரையை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு தூர்தர்ஷனே ஆர்வம் காட்டவில்லையென்றால் விட்டு வைப்பார்களா?