இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின், கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டக்குழு செயலாளர் அ. சுப்பிரமணியன் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் குறிப்பிட்ட கோரிக்கைகள் பின்வருமாறு.. ‘கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பேரூராட்சியில் கல்லை மெயின் ரோட்டில் உள்ள பட்டாசு கடையில் தீவிபத்து ஏற்பட்டது. அதில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 20 லட்சம் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம், உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும்.
பாதுகாப்பு விதிமுறைகளை மீறியும், அரசு விதிகளை முறையாக கடைப்பிடிக்காமலும் முருகன் ஸ்டோர்ஸ் செல்வகணபதிக்கு பட்டாசு கடை விற்பனை உரிமம் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அவர்களைப் பணி நீக்கம் செய்யுமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சங்கராபுரம் வட்டக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறேன். மேலும், பட்டாசு கடை வெடித்த இடத்தின் அருகில் இருந்த கடைகள் மற்றும் எதிர்ப்புற கடைகளின் சுவர்கள், மேற்கூரைகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. இந்நிலையில், தீபாவளிக்கு விற்பனைக்கு வைத்திருந்த துணிகளும் சேதமாகி பெருத்த நட்டம் ஏற்பட்டுள்ளது. அதோடு அந்த இடத்தின் கட்டட உரிமையாளர்களுக்கும், கடைகளின் வாடகைதாரர்களுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பிற்கும் தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
பொதுமக்கள் மற்றும் வழிபாட்டுத் தலம் உள்ள இடத்தில் பட்டாசு கடை நடத்திட உரிமம் வழங்கி அனுமதி அளித்த காவல்துறை, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறையினர், இந்த இடத்தை தேர்வுசெய்து ஆய்வில் விற்பனை செய்யலாம் என்று இறுதிப்படுத்தியவர்கள் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு விபத்திற்கும், மரணங்களுக்கும் அவர்களைப் பொறுப்பேற்க வைத்து அவர்களின் மீதும் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற விபத்துகள் நடந்து அதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டால் அரசு நிவாரணம் வழங்குவதை ஒரு நடைமுறையாக கொண்டிருக்காமல், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஏற்கனவே நடப்பில் உள்ள விதிமுறைகளில் பட்டாசு கடை விற்பனையாளர்களுக்காக எந்தவிதமான தளர்வுகளும் வழங்காமல் அரசு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து பட்டாசு விற்பனை உரிமங்களை வழங்கக் கோருகிறேன்.
தற்போது தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், நடப்பில் உள்ள நிரந்தர பட்டாசு விற்பனையாளர்கள் மற்றும் தற்காலிக பட்டாசு விற்பனையாளர்களுக்குப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த வழிகாட்டுதலை உயர் அதிகாரிகளின் தலைமையில் வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். மேற்கண்ட தீ விபத்தில் உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆறுதலை தெரிவிப்பதோடு, நேர்மையான விசாரனையை மேற்கொள்ள தமிழ்நாடு அரசின் சார்பில் உயர்மட்ட விசாரணைக்குழு அமைக்குமாறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சங்கராபுரம் வட்டக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.