Skip to main content

ஆய்வுக்குச் சென்ற இந்து அறநிலையத் துறையினர்! உச்சநீதிமன்ற தீர்ப்பைக் காட்டி மறுப்பு தெரிவித்த தீட்சிதர்கள்!

Published on 07/06/2022 | Edited on 07/06/2022

 

Department of Hindu Charities who went for inspection! Dixit denies Supreme Court verdict

 

சிதம்பரம் நடராஜர் கோயில் சைவ தலங்களில் முதன்மை பெற்றது. இக்கோயிலில் உள்ள கனகசபையில் பக்தர்கள் ஏறிச் சாமி தரிசனம் செய்யப் பொது தீட்சிதர்கள் தடை விதித்தனர். இதனைக் கண்டித்து பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தியது. இதனை அடுத்து தமிழக அரசு கனகசபையில் ஏறிச் சாமி தரிசனம் செய்ய அரசாணை வெளியிட்டது. இதனை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பக்தர்கள் கனகசபையில் ஏறிச் சாமிதரிசனம் செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறையினர் நடராசர் கோயிலில் உள்ள நகைகள் மற்றும் சொத்துக்கள் விபரம், அறக்கட்டளைகள் உள்ளிட்ட கட்டளைகள் விபரம் குறித்து ஜூன் 7, 8 ஆகிய தேதிகளில் கோயிலில் ஆய்வு  செய்யப்படும் என்று கோயில் நிர்வாகத்திற்கு கடந்த மாதம் கடிதம் வழங்கினர். இதற்குத் தீட்சிதர்கள் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், அறநிலையத்துறையினர் உள்ளிட்டவர்களுக்கு கடிதம் அனுப்பினர்.

 

இந்த நிலையில், திங்களன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நடராஜர் கோவிலுக்கு வந்து தீட்சிதர்கள் உடன் ஆலோசனை நடத்தினார். அப்பொழுது அவர்கள் கருத்தைக் கேட்ட அமைச்சர், ஆய்வுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

 

Department of Hindu Charities who went for inspection! Dixit denies Supreme Court verdict

 

அதனைத் தொடர்ந்து செவ்வாய் கிழமை காலை (ஜூன்.7) சென்னை இந்து அறநிலையத்துறை வருவாய் அலுவலர் சுகுமார் தலைமையில் இணை ஆணையர்கள் (பழனி கோயில்) நடராஜன், வேலூர் லக்ஷ்மணன், கடலூர் அசோக்குமார், கடலூர் துணை ஆணையரும் ஒருங்கிணைப்பாளருமான ஜோதி, ஆடிட்டர் ராஜேந்திரன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கோயிலுக்கு ஆய்வு பணிக்காக வந்தனர். இவர்களைத் தீட்சிதர்கள் வரவேற்றனர். அவர்கள் அனைவரும் கனகசபையில் ஏறிச் சாமி தரிசனம் செய்தனர். .


பின்னர் தீட்சிதர்கள் தரப்பில் ஒரு மனுவை ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் அளித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கோயில் நிர்வாகத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது. இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு இந்தக் கோயிலுக்கு ஏற்றது இல்லை. சுமார்  2 ஆயிரம் ஆண்டுகளாகத் தீட்சிதர்களின் மூதாதையர் கோயிலில் பூஜை புனஸ்காரங்கள் செய்து நிர்வகித்து வருகின்றனர் என்று கூறி கணக்கு காட்ட மறுத்தனர். 


இதனையடுத்து அதிகாரிகள் குழுவினர் தீர்ப்பில் அப்படி இல்லையென்று எடுத்துக் கூறியும் அவர்கள் கேட்கவில்லை. இதனால் அதிகாரிகள் அவர்கள் அளித்த கடிதத்தை வாங்கிக்கொண்டு கோயில் வளாகத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகுறித்து  ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்து அறநிலையத்துறை அதிகாரி குழுவினர் சிதம்பரத்தில் தங்கி உயரதிகாரிகள் ஆலோசனைகளைப் பெற்று (ஜூன்.8) மீண்டும் கோயிலுக்கு ஆய்வுக்குச் செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது.


கோயில் ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த வி.வி சாமிநாதன் கடிதம் ஒன்று அளித்துள்ளார். அதில் சிதம்பரம் கோயிலுக்குக் கடந்த 2002-ஆம் ஆண்டு 8 கிராமில் தங்க வில்வ மாலை அளித்துள்ளதாகவும், அந்த மாலை உள்ளதா? எனப் பார்ப்பதற்கு தீட்சிதர்கள் காட்ட மறுக்கிறார்கள் எனவும், தங்க மாலையை பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். 


சிதம்பரம் கோயில் சொத்து விபரங்கள் குறித்து ஆய்வுக்கு வந்த அதிகாரிகளுக்குக் கோயில் தீட்சிதர்கள் ஒத்துழைப்பு அளிக்காததால் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்