டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தக்கோரி
அக்.10-ல் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
மக்களை எந்த நேரமும் மரண பயத்தை ஏற்படுத்தி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டையில் வருகின்ற அக்டோபர் 10 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயற்குழு மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் கூட்டம் சனிக்கிழமையன்று புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஸ்ரீதர், எம்.சின்னத்துரை உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விளக்கி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வெளியிட்டுள்ள அறிக்கை:
’’புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி, கீரமங்கலம், மணமேல்குடி, சுப்பிரம ணியபுரம், கீழாநிலைக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களை மூடுவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது. பல ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த அலுவலகங்களை மூடுவதால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். எனவே, மேற்படி இடங்களிலேயே தொடர்ந்து பத்திரப்பதி அலுவலகங்கள் இயங்குவதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.
டெங்கு காய்ச்சால் பாதிப்பால் தமிழக மக்கள் எந்த நேரமும் மரண பயத்திலேய இருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பாதிப்பு புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தினந்தோறும் உயிரிழப்புகள் நடந்துவருவதால் மக்கள் கடும் துயரத்தைச் சந்தித்து வருகின்றனர். எனவே, டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அறந்தாங்கி நகராட்சி 5-ஆவது வார்டுக்கு உட்பட்ட ஜீவா நகரில் தலித் குடியிருப்புகளுக்கு செல்லும் பாதை சில சுயநல சக்திகளால் ஆக்கிரமிப்பு செய்யபட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக்டோபர் 10-ஆம் தேதி புதுக்கோட்டையில் மிகப்பெரிய அளவலான கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ’’
- பகத்சிங்