தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருமடங்கு அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பரிசோதனை செய்யப்பட்டதில் ஜூன் மாதம் 47 பேருக்கும், ஜூலை 51 பேருக்கும் டெங்கு உறுதி செய்யப்பட்டது. அதேபோல் ஆகஸ்டில் 53 பேருக்கும், செப்டம்பர் மாதம் இந்த 20 நாட்களில் 121 பேருக்கும் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்படுள்ளது. ஒருபுறம் இன்ப்ளூயென்சா காய்ச்சலை தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் இந்த 20 நாட்களுக்குள் 1,784 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் 121 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு எண்ணிக்கையானது இரு மடங்கு அதிகம் என்ற நிலையில், அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக வரக்கூடிய நோயாளிகளுக்கு டெங்கு பரிசோதனை மேற்கொள்ள தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.