வறட்சி நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: புதுக்கோட்டையில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு
வரலாறு காணாத வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திருமயம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ்.ரகுபதி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் கே.முகமதலி, ஆலங்குடி தொகுதி எம்எல்ஏ சிவ.வீ.மெய்யநாதன், திமுக மாவட்டப் பொறுப்பாளர் கே.கே.செல்லப்பாண்டியன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், சிபிஐ மாவட்டச் செயலாளர் த.செங்கோடன், முஸ்லீம் லீக் மாவட்டச் செயலாளர் அஸ்ரப்அலி, திமுக த.சந்திரசேகரன், முன்னாள் எம்எல்ஏக்கள் கவிச்சுடர் கவிதைப்பித்தன், எஸ்.இராஜசேகரன், பெ.மாரியய்யா, உதயம் சண்முகம், விவசாயிகள் சங்கப் பொறுப்பாளர்கள் ஜி.தனபதி, எஸ்.பொன்னுச்சாமி, மு.மாதவன், சி.அப்பாவு பாலாண்டார், வி.என்.மணி, எஸ்.செல்வரெத்தினம், ஏ.ராமையன், எம்.முத்துராமலிங்கம், உள்ளிட்டோர் பேசினர்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும். 2016-17-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீடு இழப்புத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக்குழு அமைக்க வேண்டும். விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணமடைந்த விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பகத்சிங்