Skip to main content

பொதுத்துறையைப் பாதுகாக்க வலியுறுத்தி அனைத்துத் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

Published on 23/09/2020 | Edited on 23/09/2020

 

Demonstration by all unions demanding protection of the public sector!


எதிர்க்கட்சிகளின் கடும் ஆட்சேபனைக்கு இடையே, தொழிலுறவு சட்டத் தொகுப்பு, சமூகப் பாதுகாப்புச் சட்டத் தொகுப்பு, தொழிலகப் பாதுகாப்புச் சுகாதாரம் மற்றும் வேலைச்சூழல் சட்டத் தொகுப்பு (Code on Industrial Relations, the Social Security Code and the Code on Occupational Safety, Health and Working Condition) ஆகிய மூன்று தொழிலாளர் சட்டத் தொகுப்பு மசோதாக்களை நாடாளுமன்றத்தில் கடந்த 19.09.2020-ல் மத்திய அரசு தாக்கல் செய்தது.

 

இதே தலைப்புகளில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்களைத் திரும்பப் பெற்றுவிட்டு, இந்தத் திருத்தப்பட்ட புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதைப்பற்றி தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் கங்குவார், "தொழிலாளர் நிலைக்குழு அளித்த 233 பரிந்துரைகளில் 174 பரிந்துரைகளை ஏற்று இம்மசோதா பொருத்தப்பட்டுள்ளன" என்று கூறியிருக்கிறார்.

 

ஆனால் உண்மையில், முன்னர் தாக்கல் செய்த மசோதாக்களைவிட இன்னும் கூடுதலான தொழிலாளருக்கு பாதகமான அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, 100 பேருக்கு மேல் வேலை செய்யும் தொழிற்சாலைகளில், லே-ஆப், கதவடைப்பு, ஆட்குறைப்பு, ஆலை மூடல் ஆகியவற்றைச் செய்ய வேண்டுமானால், அதற்கு அரசு அனுமதி பெற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. புதிய மசோதாவில், இந்த எண்ணிக்கை 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, 299 தொழிலாளர்கள் வரை பணிபுரியும் தொழிற்சாலையில், தமது இஷ்டம்போல கதவடைப்பு, ஆட்குறைப்பு ஆலை மூடல் ஆகியவற்றைச் செய்து கொள்ளலாம் என்று உள்ளது. ஆகையால், தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, அகில இந்திய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் விடுத்த அறைகூவலின்படி, புதுச்சேரியில் AITUC, CITU, INTUC, AICCTU, LLF, AIUTUC, MLF, அரசு ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட சங்கங்களின் சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று (23-09-2020) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில், "கரோனா காலத்துக்கு சம்பளம் வழங்க வேண்டும், வேலை நீக்கம் மற்றும் ஊதியக் குறைப்பு செய்யக்கூடாது, கரோனாவுக்குப் பிறகு தொழில் இழந்தவர்களை உடனடியாக அழைத்துப் பேசி தீர்வு காணல், பொது முடக்கத்தால் வருமானம் இழந்த கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்களின் வருமானவரி செலுத்தும் அளவுக்கு வருவாய் ஈட்டாத குடும்பங்கள் அனைத்துக்கும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு, தலா ரூ.7,500 வீதம் ரூ.22,500 நிவாரணம் வழங்குதல், புலம்பெயர் தொழிலாளர்கள் சட்டப்படி தொழிலாளர்களாக பதிவு செய்வதையும் அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதையும் உறுதிப்படுத்தல், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 144 இன் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை விலக்குதல், இந்திய மக்களின் பொதுச் சொத்தான பொதுத் துறைகளை தனியார் மயப்படுத்தும் சீரழிவு நடவடிக்கைகளை நிறுத்துதல் ஆகிய கோரிக்கைகளையும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 

 

 

சார்ந்த செய்திகள்