திருச்சி பாலகரை ரவுண்டானா அருகே நேற்று மாலை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் ஜிஎஸ்டி வரியை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் டைமன் ராஜா வெள்ளையன் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். மேலும் ஆர்ப்பாட்டத்திற்குத் திருச்சி மாவட்ட தலைவர் ரவி முத்து ராஜா தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக, வணிகர்களிடம் 200% அபராத தொகையை வசூல் செய்வதை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். எடை பாலம் அருகில் லோடு வண்டிகளிடம் டெலிவரி சலான் இன்வாய்ஸ் பில் கேட்டு வணிகர்களைத் துன்புறுத்தக்கூடாது. பொருட்களின் விலை இன்று 3 மடங்கு உயர்ந்துள்ளதால் இ-வே-பில் விலக்கு ஒரு லட்சத்திலிருந்து 3 லட்சமாக உயர்த்த வேண்டும். வணிகர்கள் ஆண்டுக்குச் சேவை வரி 20 லட்சத்திலும், விற்பனை செய்யும் சரக்குக்கு 40 லட்சம் வரை வரி விலக்கு இருக்கும் போது வணிகர்களுக்கு ஜிஎஸ்டி பதிவு அவசியம் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் வணிகர்கள் கொண்டு செல்லும் சரக்கு அபராதம் விதிக்கக்கூடாது. சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பினால் சிறு குறு பெரு வணிகர்கள் தொழில் நடத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்; அதைத் தடுத்து நிறுத்தி தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் ஒரு சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றி வணிகர்களைப் பாதுகாத்திட வேண்டும். சரக்கு விற்பனை செய்யும் வியாபாரி அரசுக்கு வரி கட்டவில்லை என்றால் ஜிஎஸ்டி அதிகாரி அவர்களிடம் மட்டும்தான் வரியை வசூலிக்க வேண்டும். அதைத் தவிர்த்து எக்காரணத்தைக் கொண்டும் கொள்முதல் செய்யும் வணிகர்களிடம் அரசு வரி வசூல் செய்யக்கூடாது.
அரசு சரியான முறையில் வணிகர்களை அழைத்து ஆலோசனை கேட்கிறார்கள். ஆனால் அதன்படி செய்யாமல் பாதகமாக நடந்து கொள்கிறார்கள். வணிக வரித்துறை அதிகாரிகள் மேலும் வியாபாரிகளுக்கு இடையூறு கொடுத்தால் அடுத்த கட்ட நடவடிக்கையாகச் சரக்கு மற்றும் சேவை வரி அலுவலகம் முன்பு அனைத்து வணிகர்களும் ஒன்று சேர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என ஆர்ப்பாட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.