சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை கண்டித்தும், மாலை போட்டு செல்லும் பக்தர்களை இறைவனை பார்க்க விடாமல் தடுக்கும் கேரள அரசை கண்டித்தும் அய்யப்பா பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய பா.ஜ.க. மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,
கேரள அரசு ஒரு நெருக்கடியான நிலையை பக்தர்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. பயப்பக்தியுடன் மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் அய்யப்பனை பார்க்க விடாமல் திருப்பி அனுப்புகிறது. பக்தி இல்லாத, வேண்டுமென்றே சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறார்கள்.
திருப்பி அனுப்ப வேண்டியது பக்தர்களை அல்ல, பினராய் விஜயனை தான். மக்கள் அவரை திருப்பி அனுப்புவார்கள். கம்யூனிஸ்டு கட்சி தனது கடைசி அத்தியாயத்தை எழுதிக்கொண்டு இருக்கிறது. ஒரே மாநிலத்தில் மட்டும் ஆளும் அந்த கட்சி, இத்துடன் முடிந்து விடும்.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்தியே தீருவேன் என்று பினராய் விஜயன் கூறுகிறார். இதற்கு முன்பு முல்லை பெரியாறு விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்த போது அதை பினராய் விஜயன் நடைமுறைப்படுத்தினாரா?. இப்போது மட்டும் துடிப்பது ஏன்?. அவர்களுக்கு தீர்ப்பு முக்கியமல்ல, இந்து மத வெறுப்பை தீர்ப்பை காரணம் காட்டி நிறைவேற்றுகிறார்கள்.
இதே பினராய் விஜயன் இருமுடி கட்டி அய்யப்பனை தரிசிக்கும் காலம் வரும். கருப்பு என்பது ஆன்மீகம் என்பது எல்லோருக்கும் உணர்த்தப்படும். ஆன்மிக ஆட்சி தென்னக மாநிலங்களில் வர வேண்டும் என்று அய்யப்பன் நமக்கு உணர்த்துகிறார். அது கண்டிப்பாக நிறைவேறும். இவ்வாறு பேசினார்.