தமிழகத்தில் ஏற்கனவே 67 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில் கூடுதலாக விழுப்புரம், திருவண்ணாமலை, மற்றும் கிருஷ்ணகிரியில் மூன்று புதிய சுங்கசாவடிகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் அதன் தவணை காலாவதியான பின்பும் கூட தொடர்ந்து கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வரும் சூழலில் மேலும் புதியதாக மூன்று சுங்கச்சாவடிகளை அறிவித்ததை கண்டித்தும், சுங்கச்சாவடியின் கட்டண உயர்வு மற்றும் மக்களை சுரண்டும் கொள்ளையை கண்டித்தும், தமிழகத்தில் மட்டுமே தினந்தோறும் 50 கோடியும், ஆண்டிற்கு 18000 கோடியும் தமிழக மக்களிடமிருந்து சுங்கச்சாவடி கட்டணமாக கொள்ளை அடிக்கப்படுகிறது. ஆகவே தமிழகத்தில் உள்ள காலாவதியான சுங்கச்சாவடிகளை உடனே அகற்ற வேண்டும், புதியதாக அறிவித்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் தமிழகத்தில் சுங்கச்சாவடி இல்லாத ஒரு சூழலை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேய மக்கள் கட்சியினர் மற்றும் தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பள்ளிகொண்டாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சுங்கச்சாவடியின் கவுண்டர்களை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பத்தாவது கவுண்டரில் உள்ள கண்ணாடி உடைக்கப்பட்டது இதனால் பரபரப்பான சூழல் உருவானது. மறியல் போராட்டம் காரணமாக சென்னை - பெங்களூர் மற்றும் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து ஸ்தம்பிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதனை அடுத்து முற்றுகை மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதே போல செங்கல்பட்டு மாவட்டம் பரனுர், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, கோவை மாவட்டம் கருத்தம்பட்டி, திருச்சி மாவட்டம் துவாக்குடி, மதுரை மாவட்டம் கப்பலூர், நெல்லை மாவட்டம் நாங்குநேரி உள்ளிட்ட ஏழு சுங்கச்சாவடிகளில் இன்று மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.