கடந்த 16ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும், நடிகருமான கருணாஸ் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினார். அதில், காவல்துறை டி.சி. ஒருவரை நோக்கி சவால்விட்டப்படி பேசியதோடு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாக தெரிவித்தார். இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
இந்தநிலையில் காமராஜர் ஆதித்தனார் கழகம், சென்னை நாடார் சங்கம், தமிழ்நாடு நாடார் சங்கம், சென்னை புறநகர் நாடார் பாதுகாப்பு பேரவை மற்றும் நாடார் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கருணாசின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து 200-க்கும் மேற்பட்டோர் விருகம்பாக்கம், தசரதபுரம் பகுதில் உள்ள கருணாஸ் வீடு அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, கருணாசை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும். அவரது எம்.எல்.ஏ. பதவியை பறிக்கவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். கருணாசை கண்டிக்கும் வகையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். திடீரென அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தையொட்டி அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்ப்பட்டவர்களை மண்டபம் ஒன்றில் தங்க வைத்திருந்தனர் போலீசார்.
இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், முக்குலத்தோர் புலிப்படை இளைஞர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்துகின்றனர். பொய் வழக்கு போடுகின்றனர். நான் யாரையும் தவறாக பேசவில்லை. குறிப்பிட்ட சமூகம் குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உணர்ச்சி வசப்பட்டு பேசியதற்கான ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் பேசிய முழு வீடியோவையும் கேட்டு விட்டு என்னை விமர்சியுங்கள். அன்றைய கூட்டத்தில் பலரை ஒருமையில் பேசியதற்காக எனது மனைவியிடம் அன்றே வருத்தத்தை தெரிவித்தேன். தவறு செய்த அதிகாரிகளை தான் மேடையில் விமர்சித்தேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு மறுப்பது ஏன்? என்று கூறிவிட்டு புறப்பட்டார்.