Skip to main content

கடலூர்: பெண்ணாடத்தைத் தலைமையாகக் கொண்டு புதிய ஒன்றியத்திற்குக் கோரிக்கை!

Published on 30/07/2020 | Edited on 30/07/2020

 

கடலூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம்

 

கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்களூர், நல்லூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து புதிய ஊராட்சி ஒன்றியத்தைப் பிரிக்க வேண்டும் என்று ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

கடலூர் மாவட்டம் மேற்குப் பகுதியில் மங்களூர் நல்லூர் ஆகிய 2 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த இரண்டு ஒன்றியங்களிலும் 130 கிராம ஊராட்சிகள் உள்ளன கடலூர் மாவட்டத்தில் இந்த இரண்டு ஒன்றியங்கள் மட்டும் பரந்து விரிந்து கிடக்கின்றன. இந்த 2 ஒன்றியங்களில் இருந்தும் கிராம ஊராட்சிகளைப் பிரித்து பெண்ணாடத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிதாக ஒரு ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

 

நேற்று நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய சேர்மன் செல்வி ஆடியபாதம் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர்கள் அடங்கிய கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பெண்ணாடத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தனி ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

 

இதன் மூலம்  கிராமப்புறங்களில் இருந்து  ஒன்றிய அலுவலகங்களுக்கு  நீண்ட தூரம்  பயணிக்க வேண்டியுள்ளது.  இது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை உண்டாக்குகிறது. மக்களின் தேவை அறிந்து தனி ஒன்றியம் உருவாக்க வேண்டும் என்று கூறுகின்றனர் ஒன்றிய கவுன்சிலர்கள்.

 

மேலும் கிராம ஊராட்சித் தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என கவுன்சிலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனையை ஊராட்சி மன்றத் தலைவர்களை அழைத்துப் பேசி சரி செய்வதாக சேர்மன் செல்வி ஆடியபாதம் தெரிவித்துள்ளார்.

 

இக்கூட்டத்தில் துணை சேர்மன் ஜான்சி மேரி தங்கராசு, ஒன்றிய கவுன்சிலர்கள் பச்சமுத்து,  மனோகரன், முத்துக்கண்ணு,  சிவகுமார் உட்பட  பலர்  கலந்து கொண்டனர். இக்கூட்டம் ஒன்றிய ஆணையர்கள் காமராஜ், ஜெயக்குமார், மேனேஜர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

 

ஒன்றிய கவுன்சிலர்கள் தாங்கள் வெற்றிபெற்ற பகுதிகளுக்குச் செய்யப்படவேண்டிய திட்டங்கள் குறித்து சேர்மன் செல்வி ஆடிய பாதத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் பேசி திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று சேர்மன் உறுதியளித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்