அரியலூர் மாவட்டம் அசாவீரன்குடிக்காடு கிராமத்தில் நடைபெற்ற கோரிக்கை மாநாட்டில் தமிழக மக்கள் நல்லாட்சி கூட்டமைப்பு சார்பிலும் புதிய தலைமுறை மக்கள் கட்சி சார்பிலும் பாரம்பரிய அரிசி வகைகளை ரேசன் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை வேண்டும் என்று தீர்மானம் இயற்றப்பட்டது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தமிழக மக்கள் நல்லாட்சி கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு களம் கண்ட அமைப்பு சார்பில் நடைபெற்ற கோரிக்கை மாநாட்டில் 200 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைத் தமிழக மக்கள் நல்லாட்சி கூட்டமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளரும், அரியலூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான தங்க சண்முக சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வாசித்தார். மேலும், கோரிக்கை மாநாட்டில் கோரிக்கைகள் அடங்கிய மலரை தமிழ்க்களம் அரங்கநாடன் வெளியிட, கூட்டமைப்பின் குன்னம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ம. இராவணன் பெற்றுக்கொண்டார். மாநாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி பாக்கியராஜ், தஞ்சையைச் சேர்ந்த பனசை அரங்கன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
மேலும், மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்களான, ‘நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ. 30/- விவசாயிகளிடம் வாங்குவது தவிர்க்கப்பட வேண்டும்; இறக்குமதி வரி இல்லாமல் 25 ரூபாய்க்கு பெட்ரோல், டீசல் தமிழ்நாடு அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதற்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போடுவதனை நிறுத்திக்கொள்ள வேண்டும்; தமிழில் குழந்தைகளுக்குப் பெயர் வைத்து அரசுப் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்க்கும் குழந்தைகளுக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; பைக், சைக்கிள், மாட்டுவண்டியில் மணல் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும்’ உள்ளிட்ட 200 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.