டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட சேலத்தைச் சேர்ந்த மேலும் 3 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம், சேலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேஷியாவில் இருந்து வந்த முஸ்லிம் உலமாக்கள் 11 பேர் கொண்ட குழுவினர் கடந்த மார்ச் 11ம் தேதி சேலம் வந்திருந்தனர்.அவர்கள் சேலத்தில் மசூதிகளில் தங்கி மதப்பரப்புரைகளில் ஈடுபட்டு வந்த விவகாரம் மாவட்ட நிர்வாகத்திற்குக் காலதாமதமாகவே தெரிய வந்தது.அதுவும் பொதுமக்கள் தகவல் அளித்த பிறகே தெரிந்தது.
அந்தக் குழுவினரைப் பிடித்து மருத்துவப் பரிசோதனை செய்ததில் நான்கு பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதும்,அவர்களுக்கு வழிகாட்டியாகச் செயல்பட்டு வந்த சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கும் என மொத்தம் ஐந்து பேருக்கு வைரஸ் தொற்றை உறுதிப்படுத்தினர் மருத்துவர்கள்.அதற்கு முன்பே சேலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இத்தொற்று இருந்தது.ஆக, 6 பேருக்கும் சேலம் அரசு மருத்துவமனையில் தனிமை வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்பிறகு, இந்தோனேஷிய குழுவினருடன் தொடர்பில் இருந்த மேலும் ஒருவர் மற்றும் டெல்லி நிஜாமுதீனில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டிற்குச் சென்று வந்த இருவர் எனக் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.
டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டிற்குச் சேலத்தில் இருந்து 57 பேர் சென்று வந்திருப்பது தெரிய வந்தது. அவர்களை, அவரவர் வீடுகளிலேயே மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில் அவர்களில் மேலும் 3 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதையடுத்து சேலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.அவர்களுக்கும் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள தனிமை வார்டுகளில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.