தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராததின் மூலம் சட்டமன்றம் தனது கடமைகளைச் செய்ய ஆளுநர் தடுக்கிறார். ஆளுநரின் செயல்பாடுகளால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், அரசமைப்பு சட்டத்தின் செயல்பாட்டுக்கும் முட்டுக்கட்டையாக இருக்கிறார். பல்வேறு மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளது மட்டுமின்றி ஊழல் வழக்குகள் தொடர அனுமதி தருவதிலும் ஆளுநர் தாமதம் செய்கிறார்.
அந்த வகையில் முன்னாள் அமைச்சர்கள் பி.வி. ரமணா, சி. விஜயபாஸ்கர் ஆகியோருக்கு எதிராக ஊழல் வழக்குப்பதிவு செய்யக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அரசு அனுமதி கோரியது. இதற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் தரவில்லை. அதேபோன்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்ய கடந்த மார்ச் மாதம் அனுமதி கோரிய நிலையில் அதற்கும் இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை. டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் தொடர்பான கோப்புகளையும் ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்புகளுக்கு அரசு உரிய விளக்கத்துடன் மீண்டும் அனுப்பி வைத்த போதும் ஆளுநர் ஒப்புதல் தர மறுத்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட 2 மசோதாக்கள் உட்பட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு அளிக்கும் மசோதாவுக்கும் ஆளுநர் இன்னும் ஒப்புதல் தரவில்லை. முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது வழக்கு தொடர கடந்த ஆண்டு செப்டம்பரில் அனுமதி கோரிய நிலையில் இதுவரையில் ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. கைதிகள் முன் விடுதலை செய்வது தொடர்பான கோப்புகளுக்கும் ஒப்புதல் அளிக்காமல் தாமதிக்கிறார்.
இதன்மூலம் அரசியலமைப்பு சட்டப்படி ஆற்ற வேண்டிய பணிகளைத் தமிழக ஆளுநர் நிறைவேற்றவில்லை. மசோதாக்கள், அரசாணைகளுக்கு ஆளுநர் ஒப்புதல் தரத் தாமதிப்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. ஆளுநரின் இத்தகைய செயல் சட்டப்படி தவறு. மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததின் மூலம் தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார். ஆளுநரின் இத்தகைய செயல் தன்னிச்சையானது மற்றும் அர்த்தமற்ற செயல் ஆகும். ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல் எதிரி போல் செயல்படுகிறார். சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர்கள் பரிசீலிப்பதற்கான கால வரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். ஆளுநர்களுக்கு என்று குறிப்பிட்ட காலக்கெடு விதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.