கோவையில் கரோனா தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போட தாமதமானதால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையைப் பொறுத்தவரை கரோனா தாக்கம் என்பது படிப்படியாக குறைந்துவருகிறது. மொத்தமாக கோவையில் 7,590 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்துவரும் நிலையில், கோவை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 7 லட்சத்து 86 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
7,500 கோவாக்சின் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதால், இதை மாவட்டத்தில் உள்ள அனைத்து மையங்களிலும் போட மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், 18 முதல் 45 வயதுவரை உள்ளவர்கள் அந்தந்த மையங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழ்நிலையில் காலை 8 மணிமுதலே கோவை ஆலாந்துறையிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்கள் காத்திருந்தனர்.
ஆனால் 10 மணிக்கு மேலாகியும் தடுப்பூசி செலுத்தாமல் சுகாதாரத்துறையினர் தாமதம் செய்துள்ளனர். ஊழியர்கள் யாரும் வரவில்லை என மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். உடனடியாக சுகாதாரத்துறைக்குத தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் தற்போது முகாமிற்கு வந்துள்ளனர். தடுப்பூசி போட தாமதமானதால் மக்கள் சாலை மறியல் செய்தது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.