குடிபோதையில் நண்பனை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட வாலிபர், மனசாட்சி உறுத்துவதாக கூறி தாமே முன்வந்து சரணடைந்துள்ளார்.
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்துள்ள ஒழுகைமங்கலம் கிராமத்தைச்சேர்ந்தவர் விஸ்வநாதன். பழனியில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். அவரது நண்பர் முஸ்தாபா என்கிற மணிமாறன். மணிமாறனின் மனைவி ராகவி பிஇ பட்டதாரி, மணிமாறனும் ராகவியும் ஒரே தெருவில் பக்கத்து பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள். இருவரும் படிக்கும்போது காதலித்து ராகவியின் வீட்டை எதிர்த்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். வேலை இல்லாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டில் இருக்கும் ராகவியை அடித்து துன்புறுத்துவதை பக்கத்து வீட்டில் இருக்கும் ராகவியின் பெற்றோர்களுக்கு கோபம் அதிகரித்துக்கொண்டே இருந்தது."இனி எங்களுக்கும் ராகவிக்கும் எந்த தொடர்பும் இல்லை என கிராமபஞ்சாயத்திலும், காவல்நிலையத்திலும் எழுதிக்கொடுத்திருந்ததால் மணிமாறனை எதிர்த்து பேசமுடியாத நிலையில் ராகவியின் பெற்றோர்கள் தவித்துக்கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் விஸ்வநாதன் பொங்கல் கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளான். ஊருக்கு வந்த அன்று இரவே மாணிமாறன் தனது வீட்டிற்கு அழைத்திருக்கிறார். நண்பன் அழைக்கிறானே என விசுவநாதனும் மதுபாட்டில்களோடு மணிமாறன் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது மணிமாறனும் அவரது மனைவி ராகவியும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.
விஸ்வநாதனை கண்டதும் மணிமாறன் ராகவியை உதைத்து கீழே தள்ளிவிட்டு விட்டு நண்பனோடு கொள்ளைபுறத்தில் அமர்ந்து மது அருந்தியிருக்கின்றனர், நள்ளிரவு நேரமாகியும் மணிமாறன் வீட்டிற்கு வரவில்லை. சண்டை போட்டுவிட்டு சென்றதால் ராகவியும் தேடவில்லை. மறுநாள் விடிந்ததும், மணிமாறன் தூக்கில் தொங்குவதாக கத்திக்கொண்டே விஸ்வநாதனை வரவழைத்து அவிழ்த்துக் கீழே போட்டுள்ளனர். இந்த விவகாரம் தெரு முழுவதும் தீயாக பரவ, மக்கள் கூடிவிட்டனர். பொங்கல் தினம் என்பதால் அந்த விவகாரத்தை பெரிதுபடுத்தாமலும், காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்காமலும் மணிமாறனின் உடலை அடக்கம் செய்யாமல் எரித்துவிட்டனர்.
இந்த சூழலில் நண்பனின் கொலை தன்மனதை உறுத்துவதாக கூறி எடுக்கட்டாஞ்சேரி கிராம நிர்வாக அதிகாரியிடம், நான்தான் மணிமாறனை கொலை செய்தேன் என கூறி ஆஜராகியிருக்கிறான். இந்த விவகாரத்திற்கு பின்னால் இன்னும் ஒரு சிலர் இருப்பதாக பரபர்பாகிவருகிறது.
இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம், " எங்களுக்கு புகார் வரல, விஸ்வநாதன் ஆஜராகியதும் வழக்குப்போட்டிருக்கிறோம், ஆஜரான விஸ்வநாதன் அவனை மதுபாட்டிலால் மண்டையில் அடித்தேனே ஒழிய தூக்குப்போட்டது நான் இல்ல என கூறியிருக்கிறான்.
தூக்கிட்டு தொங்கிய மரத்தை ஆய்வுசெய்ததில் ஒருவர் தூக்கில் தொங்கவிட்டிருக்க முடியாது, ஆக மணிமாறனின் மனைவியின் உதவியோ, அல்லது விஸ்வநாதன் அடித்ததை பார்த்த ராகவியின் உறவினர்களோ இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகித்து விசாரித்துவருகிறோம்," என்கிறார்கள்.
மணிமாறனின் உறவினர்களோ," புருஷன் செத்துட்டானேன்னு துளி கண்ணீர்கூட விடல ராகவி. அவளோட உதவியோடதான் மணிமாறனை கன்னுருக்கனும், அதோட மணிமாறனை அழைத்துச்சென்ற விஸ்வநாதனையே அழைத்து தூக்கில் தொங்கியவனை அறுத்ததாக சொல்லுறாங்க, நாங்க ஒடிவந்து பார்க்கும்போது கீழேதான் கிடந்தான் கழுத்தில் கயத்தால் நெருக்கிய காயம் இருந்தது. ராகவியின் உடந்தையோடு நடந்திருக்கனும், அல்லது அவரது உறவினர் செய்திருக்கனும்,ராகவி விஸ்வநாதனுக்கு ஏதோ ஒருவகையில் இணங்க மறுத்ததால் ஆஜராகியிருக்கலாம். எப்படியோ இந்தகொலைக்கு பின்னால் ராகவியும் இருக்கிறார்," என்கிறார்கள்.