பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று வந்தது. வழக்கில் ஆஜராக கோர்ட்டுக்கு வந்தார் அண்ணாமலை. விசாரணைக்கு பிறகு ஆகஸ்ட் மாதத்திற்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கோர்ட்டுக்கு வெளியே வந்த அண்ணாமலை திமுகவை அட்டாக் செய்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். திமுகவின் 300-க்கும் மேற்பட்ட பினாமிகள் பற்றிய விபரங்களை தனது நடைப்பயணத்துக்கு முன்னதாக வெளியிடலாமா என ஆலோசித்து வருவதாகச் சொன்னார் அண்ணாமலை.
திமுகவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அண்ணாமலை அப்செட்டாகி இருக்கிறார் என்கிறார்கள் பாஜகவினர்.
இது குறித்து நாம் விசாரித்தபோது, "முதன்முதலாக கோர்ட்டுக்கு வருகிறார் அண்ணாமலை. அதுவும் திமுக டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கினை எதிர்கொள்ள கோர்ட்டுக்கு வருகிறார். அப்படியிருக்கும் நிலையில், அவரது வருகையை ஒட்டி சைதாப்பேட்டை நீதிமன்ற பகுதியையே பாஜக தொண்டர்கள் திணறடித்திருக்க வேண்டாமா? சென்னையில் அமைப்பு ரீதியாக பாஜகவுக்கு 7 மாவட்ட தலைவர்கள் இருக்கிறார்கள். மாவட்டத்துக்கு 500 பேர் என்றாலும் 3,500 பேர் திரண்டிருக்க வேண்டும். அதேபோல, சென்னைக்கு அமித்ஷா வந்தபோது, 'தென்சென்னையில் 1000 பூத்களை நிறைவு செய்திருக்கிறோம். ஒவ்வொரு பூத்-க்கும் 13 பேர் அடங்கிய கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது' என பட்டியல் வாசித்தார்கள். அதனைக் கணக்கில் கொள்ளும் போது, பூத்-க்கு 1 நபர் வந்திருந்தால் கூட 1000 பேர் வந்திருக்க வேண்டும்.
ஆனால், கோர்ட்டுக்கு வந்தவர்களோ வெறும் 300 பேர்தாம். இதில் 100 பேர் வழக்கறிஞர்கள். இதில் பாஜகவினர் 30 பேர்தான் இருந்தனர். அதனால் தான் அப்செட்டானார் அண்ணாமலை. தனது வருகையின் போது 3000 பேர் திரண்டிருந்து சைதாப்பேட்டையே திணறியிருந்தால்தான் திமுக பயப்படும். ஆனா, அப்படி நடக்கவில்லையே என அவர் அப்செட்டாகியிருக்கிறார்" என்று தெரிவிக்கின்றனர் தமிழக பாஜக நிர்வாகிகள்.