அதிமுகவிற்கு சரிவே கிடையாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''பாஜக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணிக்கு பிரதமர் பலமுறை தமிழகத்திற்கு வந்து கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். பாஜகவின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருகை புரிந்து கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்கள். கோவையில் கூட பிரதமர் மோடி ரோட் ஷோ நடத்தினார், அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். இப்படி அவர்கள் தமிழகத்தில் முகாமிட்டு மத்தியிலும் மாநிலத்திலும் இருக்கின்ற அமைச்சர்களலெல்லாம் இங்கே தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டார்கள். ஆனால் அதிமுகவில் எங்கள் கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எங்களுக்காக பிரச்சாரம் செய்தார். எங்கள் கூட்டணியில் இருந்த சில கட்சி தலைவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட காரணத்தினால் ஒரு சில தொகுதிகளில் மட்டும்தான் பிரச்சாரம் செய்ய முடிந்தது. அதிமுக மூத்த நிர்வாகிகள் ஆங்காங்கே அந்தந்த இரண்டு மூன்று மாவட்டங்களில் அங்குள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய முடிந்தது.
திமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதற்காக திமுக அமைச்சர்கள் பல இடங்களில் முகாமிட்டிருந்தார்கள். இதனால் எங்களுடைய மூத்த கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் வேறு நாடாளுமன்றத் தொகுதியில் சென்று பிரச்சாரம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இருந்தாலும் இத்தனைக்கும் இடையில் தான் அதிமுக ஒரு சில வாக்குகள் கூடுதலாக பெற்று வாக்கு சதவீதம் அதிகரித்து இருக்கிறது. அதோடு இது நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற தேர்தல் அல்ல. 2014-ல் இதே கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக மூன்றாவது இடத்திற்கு தான் வந்தது. அதிமுக வெற்றி பெற்றது. அதற்கு அடுத்த வாக்குகள் பெற்றது சி.பி.இராதாகிருஷ்ணன். அவர் அதிமுக வேட்பாளரை விட 42 ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்றுத் தான் தோல்வி அடைந்தார். ஆனால் திமுக 2 லட்சத்து 17,000 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. எனவே அதிமுகவிற்கு சரிவே கிடையாது'' என்றார்.