தமிழ்நாட்டில் அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவரும் அர்ச்சகராகலாம் என்ற அரசின் அறிவிப்பால் எங்களுடைய மந்திரம் ஓதும் பணி பாதிக்கப்படாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் கே.என். நேருவிடம் பட்டர்கள் மனு ஒன்றை அளித்துள்ளனர். திருச்சி ஸ்ரீரங்கம், திருவெள்ளறை, உறையூர், அன்பில் பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பட்டர்கள் நேற்று (12.09.2021) அமைச்சர் கே.என். நேருவிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அதில், “ஆண்டாண்டு காலமாக நாங்கள் கோவில்களில் மந்திரம் ஓதும் திருப்பணியை மேற்கொண்டுவருகிறோம். தற்போது புதிதாக அமைந்திருக்கக் கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு, அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. எனவே அந்த அறிவிப்பின் மூலம் எங்களுடைய பணிகள் ஒருபோதும் பாதிக்காதபடி அரசின் செயல்பாடுகள் இருக்க கோரிக்கையை முன்வைக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், “முழுநேரப் பணியாக கடவுளுக்கு மந்திரம் ஓதும் திருப்பணி செய்வதை மட்டுமே வழக்கமாகக்கொண்டிருக்கும் எங்களுக்கு அரசின் எந்த உதவியும் சம்பளமும் கிடையாது. கடவுளின் திருப்பணிக்காக மட்டுமே நாங்கள் உழைக்கிறோம். எனவே அரசு எந்த முடிவை எடுத்தாலும், எங்களுடைய பணி பாதிக்காதபடி அந்த முடிவுகள் இருக்க நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.