அதிக உயரம் மற்றும் அகலமாக ஜவுளி சுமைகளை ஏற்றுவதால் லாரி உரிமையாளர்கள் அடிக்கடி அபராதம் செலுத்த நேரிடுகிறது என்பதால், தமிழகம் முழுவதும் இன்று (நவ. 5) முதல் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு வட இந்திய மாநிலங்களுக்கு ஜவுளி சுமைகளை ஏற்ற மாட்டோம் என லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இருந்து வட இந்திய மாநிலங்களுக்கு நாள்தோறும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சரக்கு லாரிகளில் ஜவுளிகள் கொண்டு செல்லப்படுகின்றன. ஈரோடு, திருப்பூர், பல்லடம், சோமனூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளி ஆலைகள், துணி ஏற்றுமதி நிறுவனங்களில் இருந்துதான் அதிகளவில் ஜவுளிகள் வட இந்தியாவுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், ஜவுளி சுமைகளை முறைப்படுத்தக் கோரி நவ. 5ம் தேதி (வியாழக்கிழமை) முதல் மூன்று நாள்களுக்கு (நவ. 7 வரை) ஜவுளிகளை சரக்கேற்றுவதில்லை என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அதிரடியாக முடிவு செய்துள்ளது. இதற்கான விழிப்புணர்வு துண்டறிக்கைகளை நாமக்கல்லில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் வாங்கிலி நேற்று முன்தினம் வெளியிட்டார்.
இதையடுத்து வாங்கிலி கூறுகையில், ''ஜவுளி சுமைகளை பதிவு (புக்கிங்) செய்யும் முகவர்கள், சரக்கு உரிமையாளர்கள் அரசின் விதிகளை மீறி அதிக உயரம் மற்றும் அகலமாக சுமைகளை லாரிகளில் ஏற்றி அனுப்புகின்றனர். இதனால் லாரி உரிமையாளர்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் போக்குவரத்துத் துறையினர் அபராதம் விதிக்கிறார்கள்.
அரசு நிர்ணயித்துள்ள 3.8 மீட்டர் உயரம், 2.6 மீட்டர் அகலம், 12 மீட்டர் நீளம் உள்ளவாறு ஜவுளி சுமைகளை ஏற்ற வேண்டும். இதை நடைமுறைப்படுத்தக் கோரி நவ. 5ம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு ஜவுளிகளை லாரிகளில் ஏற்றக்கூடாது என்று தீர்மானித்து இருக்கிறோம்'' என்றார்.
தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில், லாரி உரிமையாளர்கள் திடீரென்று சரக்கு ஏற்ற மாட்டோம் என்று அறிவித்துள்ளதால் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஜவுளிகள் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு லாரியில் சராசரியாக 25 டன் ஜவுளிகள் ஏற்றப்படுகிறது. லாரி உரிமையாளர்களின் போராட்டத்தால் மூன்று நாள்களில் சுமார் 3 லட்சம் டன் ஜவுளிகள் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.