அண்ணாமலை பல்கலைக்கழக மைய நூலகம் அருகே பல்கலைக்கழக ஆசிரியர்கள், பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், மைய நூலகத்தின் அருகே 61 மரங்களை வெட்டிவிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு உயர் ஆய்வுக்கூடம் கட்டுவதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், கட்டுமான வேலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்; ஆய்வகத்தினை பல்கலைக்கழக வளாகத்தில் மரங்கள் இல்லாத பயன்பாடற்ற இடத்தில் கட்ட வேண்டும்; 61 மரங்களை வெட்டிய இடத்தில் மீண்டும் 650 மரங்களை நட்டு மீண்டும் பூங்காவாக அமைத்திட வேண்டும்; அந்த இடத்தில் பூங்காவை நிறுவிய துணைவேந்தர் முத்துக்குமாரசாமியை நினைவுகூரும் வகையில் நினைவு பூங்கா அமைத்திட வேண்டும் என போராட்டத்தில் கோஷங்களை எழுப்பினார்கள். இந்தப் போராட்டத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், பணியாளர்கள், முன்னேற்ற சங்கத் தலைவர் அன்பரசன், பொதுச் செயலாளர் குமார், பேராசிரியர்கள் பழனிவேல்ராஜா, அருள்வாணன், சமூக சிந்தனை பேரவை நிர்வாகிகள், முன்னாள் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.