கந்துவட்டிக் கொடுமையால் தாய், மகள் தற்கொலைக்கு முயன்ற வழக்கில், கந்துவட்டிக்காரரைக் காப்பாற்றும் நோக்கில் வழக்கின் பிரிவுகளை மாற்றி முதல் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளார் ஆய்வாளர். இது டி.எஸ்.பி.க்குத் தெரியவந்த நிலையில், கந்துவட்டிக்காரர் மீது கந்துவட்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கினைப் பதிவுசெய்து பொதுமக்கள் தன்மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளார் டி.எஸ்.பி.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி காவல்துறை துணைச்சரகத்திற்குட்பட்டது பள்ளத்தூர் காவல் நிலையம். இந்தக் காவல் நிலையத்திற்குட்பட்ட முருக தெருவினைச் சேர்ந்தவர் பாத்திர வாடகை நிலையம் நடத்தி வரும் ராமநாதன். இவர் தனது தொழில் விருத்திக்காக ரூ.4 வட்டி என்கிற விகிதத்தில், அதே ஊரைச் சேர்ந்த ரவி என்பவரிடம் ரூ.17 லட்சம் வட்டிக்கடனாகப் பெற்றுள்ளார். இதற்காக மாதந்தோறும் வட்டித்தொகை மட்டும் ரூ.68 ஆயிரம் செலுத்தி வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் ராமநாதனுக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனால், வட்டித் தொகையினை சரிவர செலுத்த முடியாமல் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக வட்டித் தொகை கேட்டு ரவி தலைமையில் கொத்தரி வைரவன், வடிவேல் மற்றும் அசோக் ஆகியோர் ராமநாதனின் வீட்டிற்குச் சென்று வட்டித் தொகை கேட்டு பிரச்சனை செய்துள்ளனர். ராமநாதன் பணத்தைத் தராததால் வீட்டிலிருந்தப் பொருட்களைப் பறிமுதல் செய்தது மட்டுமில்லாமல், அங்கிருந்த பெண்களிடம் தகாத வார்த்தைகளையும் பிரயோகித்துள்ளது ரவி தலைமையிலான டீம். இதனால் மனமுடைந்த ராமநாதனின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் குளிர்பானம் ஒன்றில் விஷத்தைக் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கின்றனர். அக்கம் பக்கத்தினரால் மீட்டெடுக்கப்பட்ட தாய், மகள் இருவரும் சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
"சம்பவம் நடந்தவுடனே பள்ளத்தூர் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தேன். புகாரை வாங்கவில்லை. எனினும் காரைக்குடி டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு தொலைபேசியில் புகார் செய்தேன். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்கிறார் பாதிப்பிற்குள்ளான ராமநாதன். மேற்கொண்டு விசாரணைக்காக பள்ளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திலகா, சிவகங்கை அரசு மருத்துவமனைக்குச் சென்று தாய், மகள் இருவரையும் விசாரித்துவிட்டு, குற்ற வழக்கு எண் 18/21 கீழ் ஐ.பி.சி. 306, 448, 506 (2) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தார்.
“இதிலுள்ள ஐ.பி.சி. 306 என்பதே கந்துவட்டிக்காரரைக் காப்பாற்றும் நோக்கில் போடப்பட்டதாகும். அதாவது, தற்கொலைக்குத் தூண்டுதல் என்கிறது அப்பிரிவு. உண்மையில் அவர்கள் இப்பொழுதுவரை உயிரோடு இருக்கிறார்கள். எளிதில் இதைக் காட்டியே வழக்கினை ஒன்றுமில்லாமல் நீர்த்துப்போக செய்துவிடுவதற்கே இப்பிரிவினைச் சேர்த்துள்ளார் ஆய்வாளர்" என்றார் மூத்த வழக்கறிஞர் ஒருவர். இது காரைக்குடி காவல்துறை துணைச்சரக டி.எஸ்.பி. அருணுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், வழக்கில் ஐ.பி.சி. 306ஐ நீக்கிவிட்டு 448, 506(1) ஆகிய பிரிவுகளுடன் தமிழ்நாடு கந்துவட்டி தடுப்புச் சட்டம் பிரிவு 4-கையும் வழக்கில் சேர்த்தார். இது பொதுமக்கள் மத்தியில் பரவிய நிலையில் சமூகவலைதளத்தில் டி.எஸ்.பி. அருணுக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர் காரைக்குடிவாசிகள்.
படம்: விவேக்