மக்களை பாதிக்காத வகையில் போக்குவரத்துக் கட்டணத்தை உயர்த்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் சேலத்தில் வெள்ளிக்கிழமை (மே 13) நடந்தது. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இக்கூட்டம் நடந்தது. தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் ஆத்தூரில் மே 18ம் தேதி நடக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை விரிவாக செய்வது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அமைச்சர் நேரு பேசியது; மோசமான நிதிநிலையிலும், தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். அதிமுக ஆட்சியில் வைத்துவிட்டுச் சென்ற டெண்டர் தொகைக்காக தான் கடன் வாங்க வேண்டியுள்ளது. திமுகவின் சின்னச்சின்ன விஷயங்களைக் கூட எதிர்த்தால்தான் அரசியல் வாழ்வு என்று பாஜக தலைவர் அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். திமுகவின் தொடர் வெற்றிகள், அனைவரின் கண்களையும் உறுத்துகிறது. விரைவில் கூட்டுறவு சங்கங்களுக்குத் தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு நேரு பேசினார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் கட்டுமானப் பொருள்களின் விலை பல மடங்கு உயர்ந்தது. நிதி ஆதாரத்தை அதிகரிக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. சூழ்நிலைக்கு ஏற்ப, சிலவற்றின் கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. மக்களை பாதிக்காத வகையில் போக்குவரத்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்'' என்றார்.
சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ, மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.