திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் உள்ள மாராடி கிராமத்திலிருந்து கட்டப்பள்ளி செல்லும் வழியில் உள்ள சறுக்குபாலம் என்ற இடத்திலும், ஐயாறு ஓடைக்கு அருகிலும் சுமார் 30- க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து கிடந்தது.
இச்சம்பவம் குறித்து மாராடி ஊராட்சி மன்றத் தலைவர் செல்லதுரை கொடுத்த தகவலின் அடிப்படையில் வனக்காவலர் மற்றும் வனச்சரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். அதில், பெரும்பாலான மயில்கள் இறந்து அழுகிய நிலையில் வயல் ஓரங்களில் கிடந்தது. இறந்து கிடந்த மயில்களில், சிலவற்றைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோபனபுரம் வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
பெரும்பாலான மயில்கள் அழுகிய நிலையில் இருந்ததால் அவற்றை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும் அந்த பகுதியில் உள்ள வாய்க்காலில் தண்ணீர் அதிக அளவில் ஓடுவதால், மேலும் பல மயில்களின் உடல்கள் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம். இதனால் சுமார் 50 மயில்கள் வரை இறந்திருக்க வாய்ப்புள்ளதாகவும், மேலும் சுற்றுவட்டார பகுதி முழுவதும் நெல் நடவு செய்துள்ளதாலும், தற்போது கதிர் விடும் பருவம் என்பதால் நெற் பயிர்களை காப்பதற்காக மயில்களுக்கு விஷம் வைத்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில், வயல்வெளியில் உள்ள நெற்கதிர்களை மயில்கள் கூட்டமாக சென்று உணவாக உட்கொள்வது வழக்கம். தற்போது அறுவடை நெருங்கும் சமயத்தில் வயல்வெளியில் முகாமிட்டிருந்த மயில்கள் நெற்கதிர்களை உணவாக உண்டதாகக் கூறப்படுகிறது.